Tuesday, November 1, 2011

"பகிரங்க மன்னிப்பு கேள்' : அமெரிக்காவிற்கு ஈரான் நோட்டீஸ்

சவுதி அரேபிய தூதர் கொலை சதித் திட்டத்தில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து, ஈரான் முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளது. மேலும், அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான சவுதி அரேபிய தூதரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மன்சூர் அர்பாப்சியார், 56, என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரின் பின்னணியில், ஈரானின் புரட்சிப் படை இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இக்குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்துள்ள ஈரான் நேற்று முறைப்படி இதுகுறித்து அமெரிக்காவுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உறவை மேற்கொள்ளாததால், ஈரானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மூலம் இந்த நோட்டீஸ் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 29ம் தேதி, இந்த நோட்டீஸ் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு கிடைத்ததாக நேற்று முன்தினம் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நோட்டீசில் ஈரான் கூறியிருப்பதாவது: இதுபோன்று ஒரு நாட்டின் மீது குற்றச்சாட்டுகள் கூறுவது, அமெரிக்காவின் அரசியலில் ஒரு உத்தியாக பேணப்பட்டு வருகிறது. பொய்க் காரணங்களைச் சொல்லித்தான் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது.

அங்கு நடத்திய போரினால், தனது பணப் பையை நிரப்பிய அமெரிக்கா அங்கிருந்து கிளம்பும் வழியைக் காணோம். சர்வதேச சட்டங்களை மீறி, ஈரானின் தார்மீக நிலைப்பாட்டை புண்படுத்தும் விதத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறியதற்காக, ஈரான் இஸ்லாமிய குடியரசிடமும், புரட்சிப் படையிடமும் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com