Wednesday, November 30, 2011
இந்திய பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்த இலங்கை பேராசிரிருக்கு சிறைத்தண்டனை!
தன்னை இந்தியன் என்றுகூறி ஏமாற்றித் திருமணம் புரிந்த இலங்கையைச் சேர்ந்தவருக்கு அவருடைய மனைவியே வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் சவரிமுத்து. அவரது மனைவி மேரிஆக்னஸ். இவர்களது மகன் ரோகன் சவரிமுத்து. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அகதிகளாக பெல்ஜியம் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து 1987 -ல் இந்தியாவுக்கு சென்றனர்.
மதுரை, சர்வேயர் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஆத்துடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
அவர்களது மகன் ரோகன் சவரிமுத்துவைக் கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியிலும் பின்னர் மதுரையில் உள்ள பள்ளிகளிலும் சேர்த்து படிக்க வைத்தனர். அப்போது போலி ஆவணங்களைத் தயாரித்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பள்ளிச்சான்றிதழில் எழுதச்செய்தனர்.
ரோகன் சவரிமுத்து மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது அவருடன் படித்த மேரி பிரவீனாவுடன் காதல் ஏற்பட்டது. பின்னர் புதூர் தேவாலயத்தில், தான் ஒரு இந்தியன் என்று கூறி மேரி பிரவீனாவைத் திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார். (தற்போது வேறு கல்லூரியில் பணியாற்றி வருகிறார்).
இதற்கிடையே கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மேரி பிரவீனா, அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் பொய்யான தகவல்களைக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், இலங்கை அகதி என்பதை மறைத்து இந்தியன் என்று போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளதாகவும், அதன் மூலம் இங்கு சொத்துக்களை வாங்கி மோசடி செய்துள்ளதகாவும் ஊமச்சிகுளம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரோகன் சவரிமுத்து மற்றும் அவரது பெற்றோரைக் கடந்த 16.5.2008 அன்று கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கின் விசாரணை மதுரை 2 வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பொன்.செல்வன் ஆஜரானார். விசாரணை முடிவில், போலி ஆவணங்கள் தயாரித்தது, அதனை முறைகேடாக பயன்படுத்தியது, மற்றும் பொய்யான தகவல்களைக் கூறி திருமணம் செய்தது போன்ற குற்றங்களுக்காக ரோகன் சவரிமுத்து மற்றும் அவரது பெற்றோருக்குத் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு சி.உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment