Wednesday, November 30, 2011

வட கடற்பரப்பில் இலங்கை இந்திய போதைப்- பொருள் வியாபாரிகள் கடற்படையினரால் கைது.

இந்திய மற்றும் இலங்கை போதைப்பொருள் வியாபாரிகள் சிலர் வடபகுதி நெடுந்தீவுப் கடற்பிரதேசத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 1.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் ஐந்து பேர் இந்திய மீனவர்கள், மூவர் இலங்கை மீனவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களான இந்திய நாட்டவர்கள் ஐவரும் ட்ரோலர் படகுமூலம் நேற்று அதிகாலை இந்தியாவிலிருந்து ஹெரோய்ன் போதைப்பொருளை இலங்கை கடல் எல்லைக்குள் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.அதன் பின்னர் இலங்கை சந்தேகநபர்களிடம் போதைப்பொருளை ஒப்படைக்க முயற்சித்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிப் படகில் அத்துமீறி நுழைந்து ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 5 இந்தியர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீனவர்களா என்பது தனக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்கென காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய நடவடிக்கைகளை பொலிஸாரே மேற்கொள்வர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக தான் அறிந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் சட்ட நடவடிக்கையின் பிரகாரமே அனைத்துச் இடம்பெறும் என அவர் உறுதியாகக் கூறினார்.

இதேவேளை, நேற்று மாலை ராமேசுவரத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற படகையும், 5 மீனவர்களையும் உடனடி யாக விடுவித்து ராமேசுவரத்தக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இன்று 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 700 விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment