Sunday, November 13, 2011

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு பிணை

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவருடைய வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் , பணம் மற்றும் மாணிக்கக் கற்களை திருடியமை கைது செய்யப்பட்ட தம்பதியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, பொருட்கள், மற்றும் பணத்தின் ஒரு பகுதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சோமசிறி லியனகே , அதே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களான காமினி புஸ்பகுமார , எச்.எம்.ரத்நாயக, ஆனந்தராஜா ஆகியோரே பிணையில் விருதலை செய்ய உத்தரவிட்டவர்களாவார். நான்கு சந்தேக நபர்களையும் தலா 25 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் ,தலா நான்கு இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் சிரான் குணரத்ன உத்தரவிட்டார் .

ஒரு லட்சத்து 17 ஆயரம் ரூபா பணம் , 220 மாணிக்கக்கற்கள் , 23.1 கிராம் தங்க நகைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்பிக்காமல் சட்டவிரோதமாக பயன்படுத்தியமை ,பொய் சாட்சிகளை தயாரித்தமை ,செய்த குற்றங்கள் தொடர்பாக ஆவணங்களையும் சாட்சியங்களையும் இல்லாமல் செய்தமை , பொலிஸ் தகவல் புத்தகத்தில் (M.O.I.B ) உண்மைக்கு மாறான விடயங்களை பதிவு செய்தமை , கைது செய்யப்பட்ட தம்பதியினரை சட்ட விரோதமாக தடுத்து வைத்தமை உட்பட 13 குற்றச்சாட்டுகள் சந்தேக நபர்கள் மீது சட்ட மா அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நால்வரும் நீதிமன்றில் தாங்கள் நிரபராதிகள் என தெரிவித்துள்ளனர் .சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியல்சி அர்சகுலரத்ன தலைமையில் சட்டத்தரணிகள் இந்திகசில்வா ,சானக ரணசிங்க உட்பட சிரேஸ்ட சட்டத்தரணிகள் பலர் ஆஜராகியிருந்தனர்.

மிரிஹானை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் வழக்கின் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜராகியிருந்தனர் .இந்த வழக்கு 2012,மார்ச் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment