Tuesday, November 22, 2011

கடாபியின் புலனாய்வுத் துறை தலைமை அதிகாரியும் கைதானார்!

லிபியாவில் அதிபர் கடாபி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரது மகனும், கமாண்டருமான சயீப் அல், இஸ்லாம் சில நாட்களுக்கு முன்னர் புரட்சி படையினரால் நைஜர் நாட்டு எல்லையில் கைது செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து கடாபியின் தலைமை உளவாளி அப்துல்லா அல்-சனூச்சி (62) நேற்று லிபியாவின் தென்பகுதியில் உள்ள ஷபாநகரில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடாபியின் மைத்துனர் ஆவார். எனவே அவரது நம்பிக்கைக்குரியவராக வலதுகரமாக திகழ்ந்தார். ஷபா நகரில் தனது தங்கை வீட்டில் பதுங்கி இருந்த அவரை புரட்சிப்படை வீரர்கள் பிடித்தனர். கடந்த 1996-ம் ஆண்டு திரிபோலியில் உள்ள அபு சலீம் சிறையில் 1000 கைதிகளை கொன்று புதைத்த வழக்கில் மனித உரிமைகள் மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டவர்.

கடாபி மகன் சயீப் அல் - இஸ்லாமை போன்று சர்வதேச குற்றவியல் கோர்ட்டினால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஆவார். சயீப்-அல் இஸ்லாமின் நெருங்கிய ஆலோசகராகவும் இவர் திகழ்ந்தார். கைது செய்யப்பட்ட இவர் இடைக்கால அரசினால் ஒரு மறை விடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment