ஈரானில் இங்கிலாந்து தூதரகத்தில் புகுந்து தாக்குதல்
ஈரானின் அணு திட்டத்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதற்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஈரான் மக்களிடையே கடும் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து நேற்று இங்கிலாந்துடன் ஆன தூதரக உறவை முறித்து கொள்ள ஈரான் முடிவு செய்தது.
அது குறித்து மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் தலைநகர் தெக்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மீது பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். தூதரகத்துக்குள் புகுந்த கும்பல் ஜன்னல் மற்றும் கதவுகளை அடித்து நொறுக்கி சூறையாடியது.
மேலும் பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் வீசப்பட்டன. அங்கு பறந்து கொண்டிருந்த இங்கிலாந்து கொடி கீழே இறக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதே நேரத்தில் தெக்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. “இங்கிலாந்து அழிய வேண்டும், அந்நாட்டு தூதரகத்தை ஈரானில் இருந்து அகற்று” என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கிலாந்து தூதரகத்தில் இருந்த அந்நாட்டு கொடிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தாக்குதலின் போது தூதரும், ஊழியர்களும் அலுவலகத்திற்குள் பதுங்கி இருந்தனர். இதற்கிடையே தாக்குதல் நடந்த 2 மணி நேரம் கழித்து போலீசார் அங்கு வந்தனர்.
போராட்டக்காரர்களை விரட்டி அடித்து நிலமையை சரி செய்தனர். இச்சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் விடுத்துள்ளார். இது கண்மூடித்தனமான மூர்க்கத்தனமான செயலாகும். இங்கிலாந்து தூதரகத்தையும், அதன் அதிகாரிகளையும் பாதுகாக்க ஈரான் அரசு தவறி விட்டது.
இதற்கு அந்த நாட்டு அரசு பதில் கூற வேண்டும். இதற்கான பலனை எதிர்காலத்தில் ஈரான் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ளார். ஜெர்மன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment