Wednesday, November 9, 2011

மனோ கணேசன் பின்கதவால் பாராளுமன்று நுழைகின்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டி போட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனோ கணேசனுக்கு நாடாளுமன்ற பதவியை வழங்குவதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள எம்.சுவாமிநாதன் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என யானைச் சின்னத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தமை யாவரும் அறிந்தது.

அந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆயினும் பின்னர் அது வழங்கப்படவில்லை. இதனால் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி ஜனநாயக மக்கள் முன்னணி சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கியதுடன் அவரது சகோதரன் பிரபா கணேசன் அரசின் பக்கம் தாவிக்கொண்டார்.


அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஆயினும் சபையில் நிலையான ஆட்சியை வழங்குவதற்கு ஐ.தே.க ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவை நாடியிருந்தது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க லண்டன் செல்வதற்கு முன்னர் மனோ கணேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியதோடு 8ம் திகதி கொழும்பு மாநகர சபை கூட்டத்தில் தமது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறும் தான் லண்டனில் இருந்து திரும்பியதும் உடன்படிக்கைகள் செய்து கொள்ள முடியும் எனவும் கூறியிருந்தார்.

இதுவரை வெளியிடப்படாத அவ் உடன்படிக்கையின் படியே மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிகின்றது.

No comments:

Post a Comment