மருத்துவ சூயிங்கம் கண்டுபிடிப்பு கொஞ்சம் சாப்பிட பசி அடங்கும் : ‘வயிறு நிறைந்த’ உணர்வு!
பசி உணர்வை குறைக்கும் மருத்துவ சூயிங்கம்மை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இறுதிகட்ட சோதனைக்கு பிறகு இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினர். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள சிராகியூஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் டாயல் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி டாயல் கூறியதாவது: பசித்ததும் சாப்பிடுகிறோம். உடலுக்கு தேவையான அளவு உணவு கிடைத்த பிறகு, ‘பெப்டைட் ஒய்ஒய்’ (பிஒய்ஒய்) என்ற ஹார்மோன் உருவாகி, நமது ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இந்த ஹார்மோன் உருவானால், பசி அடங்கிய உணர்வு ஏற்படுகிறது. அதிகம் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் இந்த ஹார்மோன் அளவு குறைவாக இருக்கிறது. பசி அடங்கிய உணர்வு ஏற்படாமல்தான் நிறைய சாப்பிட்டு குண்டாகின்றனர்.
சர்க்கரை நோயாளி களுக்கு இன்சுலின் ஏற்றுவதுபோல, இந்த ஹார்மோனையும் செயற்கையாக உடலில் ஏற்றினால், அவர்களுக்கும் சீக்கிரமே பசி அடங்கும். உடம்பு குண்டாகாது. ஊசி வழியாக செலுத்தாமல், உணவு போல வாய் வழியாகவே இதை கொண்டு சென்றால்தான் பக்கவிளைவுகள் இருக்காது. பிஒய்ஒய் ஹார்மோனை மட்டும் செலுத்தினால், வயிறு அதை செரித்துவிடும். எனவே, பி12 வைட்டமினுடன் சேர்த்து அனுப்ப வேண்டும். பி12 மற்றும் பிஒய்ஒய் இரண்டையும் இணைத்து சூயிங்கம் வடிவில் கொண்டு வரும் ஆராய்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சாப்பிட்டவுடன் இந்த சூயிங்கம்மை மெல்ல வேண்டும். 3 முதல் 4 மணி நேரத்தில் ரத்த ஓட்டத்தில் பிஒய்ஒய் ஹார்மோன் கலக்கும். வயிறு நிறைந்திருக்கிற உணர்வு வெகு நேரம் வரை நீடிக்கும். அதாவது, வெகு நேரம் வரை பசிக்காது.
0 comments :
Post a Comment