கனிமொழிக்கு இன்று ஜாமீன் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் காட்டிய கெடுபிடியால் இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்றே தெரிகிறது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
இதனையடுத்து கனிமொழி,சித்தார்த் பெகுரா,சரத்குமார்,ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால்,கரீம் மொரானி ஆகிய 6 பேர், தங்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை விரைவில் விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெறும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், மேற்கூறிய வேண்டுகோளை ஏற்று, ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தொடங்கியது.
விசாரணையின்போது, கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்ட காரணத்தாலேயே நீங்கள் ஜாமீன் பெற முயற்சி செய்கிறீர்களா என நீதிபதி வி.கே.ஷாலி கேள்வி எழுப்பினார்.
மேலும் உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிட்டதாலேயே இந்த வழக்கில் அனைவரும் சிறையில் இருந்து வெளியேறிவிட முடியுமா? என்றும், இதுகுறித்து உயர்நீதிமன்றம் வேறு எதையும் பரிசீலிக்க தேவையில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் இந்த கெடுபிடியினால் கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்றே தெரிகிறது.
இதனிடையே இந்த ஜாமீன் மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment