மாவீரர் தின நிகழ்வுகளை கண்காணிக்க ஐரோப்பா விரைந்துள்ள விசேட புலனாய்வுப் பிரிவு
ஐரோப்பா எங்கும் ஏற்பாடாகியுள்ள மாவீரர் தின நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக இலங்கைப் புலனாய்வுத்துறையின் மிகப்பயிற்றப்பட்ட அதிகாரிகள் பல்வேறு வேஷங்களில் சகல ஐரோப்பிய நாடுகளிலும் களமிறக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கையில் புலிகளியக்கம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களுக்கு தப்பிச் சென்றுள்ள பயங்கரமான புலிகளாலும், புலிகளின் சர்வதேச வலையமைப்பாலும், தொடர்ந்தும் பிரிவினைவாத கொள்கையை ஆதரிக்கின்ற தமிழ் மக்கள் ஒருசிலராலும் இலங்கைக்கும் அதன் நற்பெயருக்கும் ஆபத்து உண்டு என அரச தரப்பினர் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
புலிகள் இயக்கம் இலங்கையில் அழிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் தேசத்தில் புலிகள் கட்டமைப்பு சின்னாபின்னமானதுடன் அதனை கட்டியெழுப்புவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை அசைவுகளையும் மிக நுணுக்கமாக அவதானிக்கும் புலனாய்வு பிரிவினர், புலிகளின் மீள்கட்டுமானத்தை தடுக்கும்பொருட்டு மக்கள் புலிகளுடன் இணைவதனை தடுப்பதற்கும், நிலைமைகளை உணராமல் புலிகளுக்கு தொடர்ந்தும் முண்டு கொடுக்கும் பொதுமக்களை இனம்காண்பதற்கும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடைபெறவிருக்கின்ற மாவீரர் நிகழ்வுகளில் சாதரண தமிழ் மக்கள் எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என அனுமானிக்கும் புலனாய்வுத் துறையினர் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும், பிரிவினைவாதக் கொள்கையுடையோருமே இந்நிகழ்வில் கலந்து கொள்வர் என உறுதியாக நம்புவதாக அறியமுடிகின்றது. எனவே இவர்களை படம்பிடிப்பதற்கும் வீடியோ செய்துகொள்வதற்கும், மேலும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்குமாக களமிறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
புலிகளை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் புலம்பெயர் தேசங்களில் புலிகளுக்காக செயற்பட்ட முன்னணி புலிப்பினாமிகள் பலரை தம்வசப்படுத்துவதில் பெருவெற்றி கண்டுள்ளனர். அத்துடன் அவர்களுடாக புலம்பெயர் தேசத்திலுள்ள தீவிர புலி ஆதரவாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் இனம்கண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி நிலையைதொடர்ந்து புலம்பெயர் தேசங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் புலிகளுக்கு உதவி செய்தவர்கள் என்ற விடயம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஆனால் புலம்பெயர் புலிகள் இலங்கையின் அமைதியை குலைக்க முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் , இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள், அல்லது அதற்கு உதவி ஒத்தாசை புரிகின்றவர்கள் இங்கு வரும்போது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என நம்பப்படுகின்றது.
எனவே மாவீரர் தினம் என்றபெயரில் புலிப்பினாமிகளால் அரங்கேறும் நிதிவசூலிப்பில் அப்பாவித் தமிழ் மக்கள் கலந்து கொண்டு புலிகளுக்கு பணத்தை கொடுத்து சிக்கலை வெகுமதியாக வாங்குவார்களா என்பதுவே இலங்கை தொக்கி நிற்கின்ற கேள்வி.
0 comments :
Post a Comment