Tuesday, November 15, 2011

பொருளாதாரத் தடைகளால் ஈரானுக்கு பாதிப்பு:அமெரிக்க அதிபர் ஒபாமா பெருமிதம்

கபோலி:"ஈரானின் அணு ஆயுதச் செயல்பாடுகளை முடக்குவதற்காக, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், அந்நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈரானின் சில குறிப்பிட்ட நிறுவனங்கள், கப்பல் கம்பெனிகள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஐ.நா.,வும் இதுவரை, நான்கு முறை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஈரான் மத்திய வங்கி உள்ளிட்ட சில முக்கிய அமைப்புகள் மீது, மேலும் தடைகளை விதிக்க வேண்டும் என, அமெரிக்கா கருதுகிறது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு வேகத்தில் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்பது, சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜன்சி வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாக, நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரான் மீதான புதிய தடைகள், அப்பகுதியில் மேலும் சீர்குலைவையே ஏற்படுத்தும் என ரஷ்யாவும், சீனாவும் கூறி வருகின்றன. இதனால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஈரான் மீதான தடைகள் குறித்த கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

ஹவாய் தீவில், இம்மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆகியோரை, 13ம் தேதி தனித்தனியாகச் சந்தித்து, ஈரான் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரினார். ஆனால், இரு நாடுகளும் தங்களது ஈரான் கொள்கையை மாற்றிக் கொண்ட அறிகுறி தெரியவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஹவாய் தீவில் ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது:ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து, நாங்கள் எதையும் ஆலோசிக்கவில்லை. எனினும், அணு ஆயுதங்கள் ஈரானிடம் இருப்பது அப்பகுதிக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் ஆபத்து.ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகள், அந்நாட்டிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், அந்நாடு வழிக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

இதேநேரம் ஒபாமா கொண்டு வந்த சுகாதார சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா ,புதிய சுகாதார சீர்திருத்த சட்டம் ஒன்றினை கடந்த 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்.

இச்சட்டத்தின்படி நாட்டில் அனைவரும் கட்டாயமாக சுகாதார இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதற்கு சமமான வரி கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்து. சர்ச்சைக்குரிய இச்சட்டத்தை முக்கிய எதிர்கட்சியான குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மகாணங்களில் 26 மாகாண அரசுகள் இச்சீர்திருத்த சட்டத்தினை எதிர்த்தன. தங்களின் அடிப்படை உரிமையினை பறிக்கும் செயல் என குற்றம்சாட்டின.

இந்நிலையில் இச்சீர்திருத்த சட்டத்தை எதிர்தது அமெரிக்க சுப்ரீம் கோர்டில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கினை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணை நடத்தப்படும் எனவும், ஜூன் மாதம் தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு (2012) அதிபர் ‌தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த வழக்கு அதிபர் ஒபாமாவிற்கு நெருக்கடியினை ஏற்படுத்தி உள்ளது.

1 comment:

  1. We think there is much worse to come.Hysterically funny nonsence.

    ReplyDelete