Monday, November 21, 2011

பூ மலரும் தருணம். எஸ். நஸீறுதீன்.

'இப்படியாகவே போயிற்று,
எங்கள் காலம்.'
இதைச் சொல்லிவிட்டுக்
களைப்பாய் எழுந்தார் கதைசொல்லி.

இறந்ததையும்
வருவதையும் புனைவதே
பிழைப்பாய்க் கொண்டோர்
இந்தக்
கசகரணம் கெட்டவர்கள்.

த(ன்)னைத் தொலைத்து
அதுவாகிக், கரைதலைக்
காணவிடாக் கரும்புள்ளிகள், -இந்தக்
கருத்துக் கந்தசாமிகள்.

அடுத்தவர் உணர்வையும்
ஓய்ந்த பொழுதுகளையும்
உண்டு செமிப்போர்.

உனக்குப் பட்டது
உன்னோடு ஒருபோதும்,
நான், நீயாக முடியா.

பட்டறியின்
படுதல், சுய இழப்பின்றி வேறில்ல.
இன்பம்,மட்டுமல்ல,
அழுகையையும் தான்.

எதையுமே, நினைவில் இருத்தி யாரும் இங்கு, கொள்ளவில்லை-நீ,
அடிக்கிற மாதிரி, அடி!- நான்
அழுவுற மாதிரி,,,,-இது
நடிப்பல்ல, வாழ்வு.

வாழ்தல், குழந்தை போல
வேஷம் தரியா.- எந்தக்
குழந்தையும், வாயால் சிரித்து
கண்டவர் யாருமில்லை.

களிப்புக் குழந்தைக்கு
கற்றலே தலைச் சுமை.
வாழ்தலுக்குக் கற்றல்,
விளக்கொளியில்
சூரியன் பார்த்தல் போல.
ஒளி இருந்தாலும்
இல்லாதுபோயினும்
தரிசனைக்கு
தலையின்றிய
அவரவர், மனம் வேண்டும்.
புத்தியால்,
பரவசப் பாக்கியமில்லை.

புத்தர்,
தமிழரல்ல:-,ஏன்
சிங்களமுமல்ல.- அவர்
ஒருகுழந்தை.

அனைத்தும் அறிந்தபின்,
பற்றுகள் அறுத்து - மீளப்
பிறந்த பிள்ளை.

அனைத்து மானிடரின்
அகல் விளக்கு.
பொதுச் சொத்தைக்
களங்கம் பண்ணாதீர்.
குழந்தை நடக்கிறது,,,,
முன்னிற்கும் கோலை-உன்
எழுதுகோலை
அப்பால் நகர்த்து.

1 comment:

  1. கனகண்ண்ணாNovember 21, 2011 at 10:09 AM

    ஒரு கணம் இதனை நோக்கின் ஒப்பிலாக் கவிதைதானே
    திருத்தலாம் என்று எண்ணிக் கவிதைகள் புனைவதன்னால் விழலுக்கிறைத்த நீராய் போகாமல் ஆகவேண்டும்.

    ReplyDelete