பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்ததான சர்ச்சைளை தொடர்ந்து அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி குற்றவாளி என நீதிமன்று அறிவித்துள்ளதுடன் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்துள்ளது.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், சரத் பொன்சேகா அபராத தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேகா வழங்கிய போட்டி தொடர்பாகவே சரத் பொன்சேகாவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் சுல்விகார் ரசீம் ஆகியோர் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளதுடன், சரத் பொன்சேகா மீதான மூன்று குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றமவர் என நீதிபதி வராவௌ தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக பொன்சேகாவின் வழக்கறிஞர் நலின் லத்துவஹெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது இன்றைய தினம் தமக்கு எழுத்து மூலமாக வழங்கப்படும் பட்சத்திலேயே திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அநீதியான தீர்ப்பு என்கிறார் சரத் பொன்சேகா
ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதுடன் இந்த அநீதியான தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன் என வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதியின் கூண்டிலிருந்து தனது கருத்தை தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று நான் எண்ணுகின்றேன் என்பதுடன் அநீதியான தீர்ப்பை நிராகரிக்கின்றேன் என்றார்.
இதேவேளை, இந்த தீர்ப்பு தொடர்பில் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் நாம் தீர்ப்பினை ஏற்றுக்கொள்கிறோம். நாம் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பினையும் ஏற்றுக்கொள்வோம். எனினும் இந்த தீர்ப்பு தொடர்பில் எமக்கு பாரிய விமர்சனம் ஒன்று உள்ளது.
அதேபோன்று எத்தகைய தீர்ப்பு வழங்கப்படுமென பொன்சேகா ஏற்கனவே அறிந்திருந்தார். இன்று நாம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் எமது பிள்ளைகள் பாடசாலை செல்வதற்குமான சூழலை முன்னாள் இராணுவத் தளபதியே ஏற்படுத்தினார்.
உலகில் எந்வொரு நாட்டிலும் இல்லாதவாறு தடுத்து வைப்பதற்கான அதிகாரம் உள்ள நிருவாகம் இலங்கையில் காணப்படுகிறது. உங்களுக்கு உரிமை உள்ளது. வீடுகளில் முடங்கிக்கிடக்காமல் முன்வருமாறு நாம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
0 comments :
Post a Comment