பிரித்தானியாவில் புலிகளின் முக்கியஸ்தர்கள் திடீர் கைது.
புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் கடந்த சில தினங்களாக பிரித்தானியாவில் கைதாகி வருவதாக அறியக்கிடைக்கின்றது. இவர்களில் சிலர் தீவிர விசாரணைகளின் பின்னர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
விநாயகம் தலைமையிலான புலிகளின் தலைமைச் செயலகம் எனும் பிரிவின் பிரித்தானிய பொறுப்பாளரான சங்கீதன் என்பவரும் கைது செய்யப்பட்டு கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பிரித்தானியாவில் ரகசிய புலனாய்வுச் சேவைப் பிரிவுகளில் ஒன்றான MI5 பிரிவைச் சேர்ந்தோராலேயே இக்கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கீதனுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
MI5 பிரிவினர் பிரித்தானிய அரசின் தேசிய பாதுகாப்புக்கு நேரிடக்கூடிய இடர்களை முறியடிக்கும் பாரிய பொறுப்பினைக் கொண்ட இரகசியப் புலனாய்வுச் சேவையாகும். இப்பிரிவினரால் மேற்படி கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதானது கைது செய்யப்பட்டோர் பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுகின்றார்களா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
தலைமைச் செயலகம் என வினாயகம் தலைமையிலும் , அனைத்துலகச் செயலகம் என நெடியவன் தலைமையிலும் இயங்கும் இரு பிரிவுகள் எதிர்வரும் மாவீரர் தினக் கொண்டாட்டங்களை யார் கொண்டாடுவது என்றபோட்டியில் பல்வேறு வன்முறைகளில் இறங்கியிருந்தனர். அத்துடன் இரு பிரிவினரும் எதிர்தரப்பினரால் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சங்கீதன் தொடர்பாக நெடியவன் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அப்பால், ஊடகவியலாளர் ஒருவர், மற்றும் பிரித்தானியாவில் பிரபல வர்த்தகர் ஒருவரும் கொலைமிரட்டல் முறைப்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி முறைப்பாடுகளின் நிமிர்த்தம் இடம்பெறவிருக்கின்ற மாவீரர் தின நிகழ்வுகளின் பெரும் வன்செயல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கும் பிரித்தானிய காவல்துறையினர் இந்நிகழ்வுகள் தொடர்பாக தொடர்பாக கண்காணித்துவருகின்றனர்.
1 comments :
இரு தரப்பும் மாவீரரை வைத்துப்
பணம் உழைக்க முயல்கிறது
Post a Comment