உண்மையான சூத்திரதாரிகள் இப்போது வெளிப்- படுத்தப்பட்டு வருகின்றனர். நோர்வேக்கு நன்றி
மேற்குலக நாடுகள் இலங்கை விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும். புலிகளை மிதமிஞ்சியளவில் எடை போட்டமை இந்தியாவும் மேற்குலக நாடுகளும் செய்த மிகப்பெரிய தவறாகும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கூட்டமைப்பினரையும், மீண்டும் பிரிவினை வாதத்திற்கு துணை போகும் சக்திகளையும் சர்வதேச நாடுகளில் தடைவிதிக்க வேண்டும். இலங்கையிலிருந்து தவறான தகவல்களை பெற்றுக்கொண்டு நோர்வே அரசாங்கம் கடந்த காலங்களில் உள்நாட்டிற்கு எதிரான வகையில் செயற்பட்டது. குறிப்பாக போர் நிறுத்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை அரசாங்கத்தை நோர்வே குறைத்தே மதிப்பிட்டது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கூடியது. ஆயினும் சகல சவால்களையும் எதிர் கொண்டு புலிகளை நாம் தோற்கடித்தோம்.
உண்மையில் கூறுவதாயின் இந்தியா செய்ய வேண்டியதையே நாங்கள் செய்தோம் ஏனென்றால் இந்திய அரசியலிலும் இங்கு காணப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளிலும் புலிகள் பெரியளவில் செல்வாக்கு செலுத்தி வந்தனர். இந்த விடயம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தது. ஆயினும் இந்த காலப்பகுதியில் கூட இந்திய அரசு இரட்டை வேடம் பூண்டதை நோர்வே வெளிப்படுத்தியுள்ளது.
உண்மையான சூத்திரதாரிகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றனர். நோர்வே காலங்கடந்தேனும் இலங்கையை புரிந்து கொண்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment