முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சரத்பொன்சேக்கா உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தல், நட்டத்தை எதிர்நோக்கிய நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்றமை மற்றும் அடுத்த ஆண்டுக்கான சில காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கொழும்பு நகரின் சில பிரதேசங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று இடங்களிலிருந்து ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.
இதன் ஒருகட்டமாக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஒருபேரணி ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட மற்றுமொரு பேரணி மருதானையில் ஆரம்பமானது.
அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் வொக்சேஷால் வீதியில் இருந்து ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.
ஹைய்ட் பார்க்கிற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேரணியில் இணைந்து கொண்டதுடன், பேரணிகளில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் மெத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, புத்திக பத்திரண,மற்றும் குமரகுருபரன் உட்பட மேலும் பலர் பங்குபற்றினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ அமெரிக்க உள்ளிட்ட அரேபிய நாடுகளில் முன் எடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் முன் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
சரத்பொன்சேகா என்றால் அரசாங்கம் ஏன் பயப்படுகிறது? மனித உரிமைகள் என்றால் அரசாங்கம் ஏன் பயப்படுகிறது? என்றும் ரணில் விக்ரமசிங்க அங்கு கேள்வி எழுப்பினார்.
இங்குமேலும் பலரும் உரையாற்றினர்.
இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேங்காய் உடைத்து ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தினால் டவுன் ஹோல் முதல் லிப்டன் சுற்றுவட்டம் வரையான பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment