Tuesday, November 1, 2011

த.தே.கூ வின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பறிக்கட்டாம். குணதாஸ அமரசேகர

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 6ம் அத்தியாயத்திற்கு அமைய நாட்டை பிளவுபடுத்தவோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கு துணைபோகவோ தேசத்துரோக செயல்களில் ஈடுபடவோம் மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தற்போது அவற்றை மீறி அமெரிக்கா, கனடா சென்று செயற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

´சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்புக்கு மத்தியில் எமக்குள்ள சவால்´ என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசியல் யாப்பை மீறிச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கான பூரண அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகருக்கு உண்டு. விசாரணையின் பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் விடுவிக்கலாம். இல்லாவிடின் தண்டிக்க வேண்டும்.

இன்று சர்சதேத்துடன் சேர்ந்து யுத்தக் குற்ற விசாரணை வேண்டும் எனக் கோருவது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளவே எனத் தெரிவித்துள்ள குணதாஸ அமரசேகர, இலங்கை அரசாங்கமும் அதற்கு அடிபணிந்து 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாயின் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிவரும் என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரணம் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டை கூறுபோடுவதற்கான முதல்படியை எடுத்துவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் லிபியாவில் செய்தது போன்று, கிறிஸ் பூத பீதியின்போது செய்தது போன்று பணத்துக்காக மக்களை ஒன்றுதிரட்டி சிவில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த அவர்கள் முயற்சிப்பர்.

அதன் பின்னர் தங்களுடைய பிரிவினவாதக் கொள்கையை நிறைவேற்றிக் கொள்வர்.

உலக வல்லரசுகளுக்கு அஞ்சாமல் தலைநிமிர்ந்து நின்ற லிபிய தலைவர் கடாபிக்கே மேற்குலகம் மரணம் கொடுத்தது என்றால் எமது நாட்டு மக்கள் தலைவர்களுக்கு அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள் என குணதாஸ அமரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com