Monday, November 28, 2011

6 மாத கால சிறைவாசத்திற்கு பின்னர். கிடைத்தது கனிமொழிக்கு ஜாமீன்.

பல முறை கிடைக்குமா, ஜாமின் கனியுமா என்ற பலத்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிலவி வந்த தருணத்தில் 4 முறைகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடியாகி வந்த போது இன்று அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் லைசென்ஸ் வழங்கி மத்திய தணிக்கை துறையில் ஒரு அதிகாரி தரப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும், இல்லை 2 ஆயிரத்து 645 கோடிதான் என்று மற்றொரு அதிகாரியும் சொல்லி வந்தாலும் இன்னும் நஷ்டம் எவ்வளவு என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலை. இருப்பினும் சி.பி.ஐ., ஆயிரம் கோடி ஆதாயம் பெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பின்னர் இதன் கண்காணிப்பில் விசாரணை நடந்தது.

ராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பேரட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் , செக்சன் 409 ( நம்பிக்கை மோசடி ) , 120 பி ( கிரிமினல் சதி ) ,420 ( ஏமாற்றுதல் ) , 468, 471 ( பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் ) , 12, 13(2) 13 ( 1 பி) ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி ஏற்றுக்கொண்டதுன், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தாம் உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

யாருக்கும் ஜாமின் கிடைக்காமல் 7 மாதம் கடந்தது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமின் கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின் மறுப்பது சட்ட விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூட ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது அடிப்படை சட்ட நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சஞ்சய் சந்திரா ( யுனிடெக் வயர்லெஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் ) வினோத் கோயங்கா ( ஸ்வான் டெலிகாம் இயக்குநர் ) , ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகள் கவுதம் தோஷி , ஹரி நாயர், மற்றும் சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமினை கடந்த ( புதன்கிழமை 23 ம் தேதி ) வழங்கியது. இந்த உத்தரவு மூலம் புதிய வழி பிறந்திருக்கிறது என்று ராஜாவின் வக்கீல் கூறியிருந்தார்.

192 நாட்கள் சிறையில் இருந்த கனிமொழி :சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து கனிமொழி உள்பட 6 பேர் ஜாமின் மனுவை விரைவில் விசாரிக்க வக்கீல்கள் டில்லி ஐகோர்ட்டில் வலியுறுத்தினர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை விசாரணையில் இருதரப்பு வாதங்களும் எடுத்துரைக்கப்பட்டது. ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதீபதிகள் வழக்கை இன்று ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணை முடிவில் மனுவை விசாரித்த நீதிபதிகள் கனிமொழிக்கு உள்பட கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபுள் நிறுவனத்தை சேர்ந்த ஆசீப்பால்வா, ராஜீவ் அகர்வால், ஆகிய 5 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். முன்னாள் தொலை தொடர்பு செயலர் சித்தார்த்பெகுராவுக்கு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கனிமொழியின் 6 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்தது. கனிமொழி கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் 2 முறையும், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தலா ஒரு முறையும் 4 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியிருக்கிறது. ஜாமின் கிடைக்குமா என பலமுறை எதிர்பார்த்து ஏமாந்த கனிக்கு இப்போது தான் ( 6 மாதத்திற்கும் மேல் சிறை - 192 நாட்கள் ) ஜாமின் கிடைத்திருக்கிறது.

நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மறுத்தது ஏன் ? : சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கலாகி கடந்த 2 முறை விசாரணைக்கு வந்தபோது : கனிமொழி, ஒரு பட்டதாரி அவர் ஒரு எம்.பி., , அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அவரது குழந்தை பராமரிப்பு என பல காரணங்கள் கூறப்பட்டு வக்கீல்களின் வாதம் இருந்தது. ஆனால் நீதிபதி ஓ.பி.,, சைனி, எந்தவொரு வாதத்தையும் ஏற்க மறுத்து விட்டார். கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு பெண் என்பதற்காக இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் இவர் புரிந்துள்ள குற்றம் மற்ற குற்றவாளிகளின் குற்றத்திற்கு சமமானது தான். மேலும் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு காரணமாக இருந்திருக்கிறார் . பெரும் குற்றம் புரிந்த இவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றார் நீதிபதி.

மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் கருணாநிதி: கனிமொழிக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஜாமின் குறித்து நிருபர்கள் அவரது வீட்டிற்கு சென்று பல கேள்விகளை கேட்டனர். இப்போது அவர் கூறுகையில்: மகிழ்ச்சி அளிக்கிறது. கனிமொழிக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படுமா என கேட்ட போது அது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். ராஜாவுக்கு ஜாமின் பெறுவது தொடர்பாக கட்சி எதுவும் முடிவு எடுக்குமா என்று கேட்டபோது அது அவரும், அவரது வக்கீலும் முடிவு எடுப்பர். கனிமொழிக்கு பலத்த வரவேற்பு இருக்குமா என்று கேட்ட போது வரவேற்பு இருக்கும். ஜாமின் கிடைத்திருப்பது வழக்கின் சாதகத்திற்கு முன்னுதாரணமாக இருக்குமா என்று கேட்டபோது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்றத்தையோ , வழக்கின் போக்கு குறித்தோ நான் விமர்சிப்பவன் அல்ல என்றார்.


நன்றி தினமலர்

No comments:

Post a Comment