ஈராக்கில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 24பேர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நகரிலிருந்து வடக்கே 20 கி.மீ.தொலைவில் தாஜி நகரில் ராணுவ முகாம் உள்ளது. இங்குள்ள சிறையில் போர் கைதிகள், அல்கொய்தா பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று ஒரு மினிபஸ் ஒன்றில் பயங்கர வெடிபொருட்களுடன் வந்த பயங்கரவாதி ஒருவன் தற்கொலை தாக்குதல் நடத்தினான். இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலியானவர்களில் 11 பேர் சிறை காவலர்கள் எனவும் 4 பேர் சிறைக்கைதிகளை பார்க்க வந்த பொதுமக்கள் எனவும் பாதுகாப்புப்படையினர் கூறினார்.
ஈராக்கில் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆட்சி வீழ்ந்த பிறகு கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் முகாமிட்டு வந்தனர். தற்போது படிப்படியாக விலகிக்கொண்ட போதிலும் பயங்கரவாத தாக்குதல் குறையவில்லை. கடந்த அக்டோபர் மாதம் வரையில் இதுவரை 161 பாதுகாப்புப்படையினர் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக , ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment