Friday, November 11, 2011

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 10 கோடி பெறுமதி தங்ககட்டிகள் சென்னையில் மாட்டியது.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி செல்லப்பட்ட தங்க கட்டிகளுடன் சென்ற கார் சுங்க துறை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. இதில் கார் சீட்டிற்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 156 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு பத்துக்கோடி கோடி ஆகும். இது போன்ற அதிகப்பட்சம் தங்கம் நாகை வட்டாரத்தில் சிக்கியது இதுவே முதன் முறையாகும் என இந்திய ப த்திரிகையொன்று தெரிவிக்கின்றது.

சென்னைக்கு நாகப்பட்டினம் வழியாக தங்ககட்டிகள் கடத்திவரப்படுவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, கஸ்டம்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணியை அடுத்த பரவை பகுதியில் அந்த வழியாக சென்ற டாடா சுமோ ( பதிவெண்: டி. என். 61 இ 6639 ) காரை சோதனையிட்டனர்.

இதில் சோதனை நடத்தப்பட்டதில் காரின் சீட்டிற்கு அடியில் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்ட்டது. மொத்தம் 15 கிலோ 600 கிராம் எடை கொண்ட 156 தங்கக் கட்டிகள் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் காரில் இருந்த கோடியக்கரையை சேர்ந்த ஆனந்த் மற்றும் டிரைவர் வேதையனை போலீசார் கைது செய்தனர்.

சுங்க துறை கமிஷனர் ஷியாம் ராஜ் பிரசாத் ஆணையின்பேரில் கூடுதல் கமிஷனர் சிவசங்கரன், உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் கூட்டு முயற்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவரங்கள் குறித்து உதவி கமிஷனர் விஜயகுமாரிடம் நிருபர்கள் கேட்ட போது , இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும் மற்றவை விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். கார் மற்றும் குற்றவாளிகளை காட்டுங்கள் என்றபோது இப்போது படம் எடுக்க அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார்.

இதேநேரம் கொழும்பிலிருந்து திருச்சி சென்ற ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்தியச் செய்தி ஒன்று இவ்வாறு தெரிவிக்கின்றது.

கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் நேற்று காலை, 8.30 மணிக்கு, திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக, திருச்சி சுங்கத் துறை வான்வழி நுண்ணறிவுப் பிரிவு

அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி வெங்கடேஷ், வான்வழி நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளர் ஏர்னஸ்ட் ரவி தலைமையிலான அதிகாரிகள், பயணிகளிடம் சோதனை நடத்திய போது, ஒரு பெண்ணின் நடை, உடைகளில் மாறுபாடு தெரிய வந்ததையடுத்து பெண் காவலர்கள் அவரிடம் சோதனை நடத்தியதில், அவரது உடல், மார்பு, வயிறு பகுதிகளில், 34 லட்சம் ரூபாய் மதிப்புடைய 100 கிராம் எடையுள்ள, 12 தங்கக் கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

கடவுச் சீட்டை ஆராய்ந்ததில் அப்பெண், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில், கார்மேகம் மனைவி சந்திரா, 45, என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரைக் கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்துக்கு நாள்தோறும், 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சவுதி, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கும், டில்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் இங்கிருந்து விமானச் சேவை இயக்கப்படுகின்றன.

திருச்சி விமான நிலையத்தை, வான்வழி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment