Friday, October 28, 2011

இந்திய RAW வும் பாக் ISI உம் இணக்கப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்கிறார் முஷாரப்.

இந்தியாவின் தேசிய உளவு பிரிவான றோ வும் , பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,யும் தங்கள் பிணக்கை விட்டொழித்து சமாதானமாக செயலாற்ற முயற்சிக்க வேண்டும்' என, முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது ஏராளமான வழக்குகள் உள்ளதால், அவர் தாயகம் திரும்பினால் கைது செய்யப்பட உள்ளார். இதற்காக அவர், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தான், இந்திய உளவு அமைப்புகள் குறித்து வாஷிங்டனில் முஷாரப் கூறியதாவது: ஆப்கானிஸ்தான் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்துள்ளது. ஏனென்றால், ரஷ்யாவின் கே.ஜி.பி., இந்தியாவின் 'ரா', ஆப்கானிஸ்தானின் 'காட்' ஆகிய உளவு அமைப்புகள், கடந்த 50ம் ஆண்டிலிருந்து கூட்டாக செயல்படுகின்றன. இதனால், ஐ.எஸ்.ஐ.,யுடனான விரோதம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு எதிரிநாடு என்பது போல இந்தியாவால் சித்தரிக்கப்படுகிறது. இது துரதிருஷ்டவசமானது. ஆப்கன் தூதர்கள், புலனாய்வு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் எல்லாம் இந்தியாவுக்கு பயிற்சிக்கு செல்கின்றனர். நான் ஆட்சியில் இருந்த போது, இதே பயிற்சியை அளிப்பதாக ஆப்கன் அதிபர் கர்சாயிடம் கூறினேன். இதற்காக எந்த பணமும் தேவையில்லை என்றும் கூறினேன். ஆனால், ஒருவரும் பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை. ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தங்கள் நாட்டு அதிகாரிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், அவர்களை இந்தியா ஆட்டுவிப்பதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடரக்கூடாது. எனவே, ஐ.எஸ்.ஐ.,யும், 'ரா' அமைப்பும் விரோத மனப்பான்மையை கைவிட்டு இணக்கமாக செயல்பட முன்வரவேண்டும். இதற்கு இருநாட்டு தலைவர்களும் உறவாக இருந்தால், மனம் விட்டு பேச முடியும். இதன் மூலம், சாதகங்களை உருவாக்கி பாதகங்களை தவிர்க்க முடியும். இவ்வாறு முஷாரப் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com