அரசியல் வாதிகள் துப்பாக்கி பயன்படுத்துவதை தடைசெய்ய புத்திஜீவிகள் வலியுறுத்தல்
அரசியல் வாதிகள் நாட்டில் துப்பாக்கி பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டும் என சிரேஷ்ட அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்காக சேவையாற்றுவதற்கு துப்பாக்கி தேவையில்லை என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாஸ்ரீ, விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம ஹேவா ஆகியோர் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகள் துப்பாக்கி வைத்திருக்கின்றமை சமூகத்தில் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதற்குக் காரணமாகியுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பணத்திலேயே அரசியல்வாதிகளுக்கு இலவசமாக துப்பாக்கி கிடைப்பதாகவும், அதன்மூலம் அவர்களின் உயிர்களே பறிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கிகளை அவர்களிடம் இருந்து அகற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குள் யுத்த சூழ்நிலையொன்று இல்லாத காரணத்தினால் அரசியல்வாதிகள் தொடர்ந்து துப்பாக்கி வைத்திருப்பது தேவையற்றதாகும் என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன்களை மேம்படுத்துவதற்காகவே அரசியல் வாதிகள் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை என கலாநிதி பிரதீபா சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதால், அரசியல்வாதிகளிடமுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு உடனடியாகவே அறிவித்தலை விடுக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் குறிப்பிடுகையில், இது பற்றிய யோசனைகள் தன்னிடம் முன்வைக்கப்படுமாயின், அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment