லிபியாவில் சிறைக் கைதிகளுக்கு கடுமையான சித்திரவதை.
லிபியாவில் தற்காலிக ஆட்சியாளர்களின் தலைமையில் சிறைக் கைதிகளை கடுமையாக சித்திரவதைச் செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
கடாபிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கிடையே கைதுச் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளை சித்திரவதைச் செய்ததற்கான ஆதாரங்கள் ஆம்னஸ்டி வசம் உள்ளதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
300 சிறைக் கைதிகளிடம் நடத்திய நேர்முகத்திற்கு பிறகு ஆம்னஸ்டி அறிக்கையை தயார் செய்துள்ளது.
இடைக்கால ஆட்சியாளர்கள் மனிதத் தன்மைக்கு ஒவ்வாத கொடுமைகளிலிருந்து விடுபெற வேண்டும் என அவ்வறிக்கை கோருகிறது. ஆகஸ்ட் 18 மற்றும் செப்டம்பர் 21 ஆம் தேதிக்கும் இடையே ஆம்னஸ்டி பிரதிநிதிகள் திரிபோலி, ஸவிய்யா, மிஸ்ருத்தா ஆகிய நகரங்களில் உள்ள சிறைகளுக்கு நேரடியாக சென்று சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சித்திரவதைகளை கண்டறிந்தனர். அதேவேளையில், சிறைக் கைதிகளை சித்திரவதைச் செய்வதை நியாயப்படுத்த முடியாது எனவும், இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் இடைக்கால அரசின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீலின் செய்தித் தொடர்பாளர் ஜலாலுல் கலால் ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கடாபி ஆதரவாளர்கள் எனக்குற்றம் சாட்டி சிறைக் கைதிகள் சித்திரவதைச் செய்யப்படுவதாக ஆம்னஸ்டி கூறுகிறது. பல கைதிகளும் கைது வாரண்ட் கூட பிறப்பிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
...............................
0 comments :
Post a Comment