Wednesday, October 26, 2011

மட்டக்களப்பின் மேர்வினாக இந்துக்களின் நம்பிக்கையை கொச்சப்படுத்தும் யோகேஸ்வரன்.

இந்து சமயத்தின் ஆணிவேராக இருப்பது நம்பிக்கையே. நம்பிக்கையின் தத்துவத்தின் அடிப்படையிலேயே இந்து சமயம் வாழ்கின்றது. அந்த நம்பிக்கையை உதாசீனம் செய்து தன்னை இந்துக்களின் தலைவனாக காட்ட முற்படும் யோகேஸ்வரன் இது போன்றவர்களின் செயற்பாடுகளை மக்கள் என்றும் சலிப்புடனே எதிர்நோக்குவார்கள்.

ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ்சோதியை முழுமுதற் கடவுளாக வணங்கிவரும் சைவசமயத்தில் மக்களது வாழ்வு நம்பிக்கையிலேயே ஆரம்பமாகிறது. புராண இதிகாச காலங்களை தொடர்ந்து வேத காலத்தில் அதர்வண வேதத்தில் மந்திரம் உருவெடுக்கிறது.

மந்திரம் குறைந்த சொற்களால் கூடிய பயனைப் பெறுதல் என வகைப்படுத்தலாம். “நிறைமொழி மாந்நர் ஆணையின் கிழர்ந்த மறைமொழி தானே மந்திரமென்ப” என்கிறது தொல்காப்பியம். இவ்வாறு பெருமை மிக்க மந்திரங்கள் இன்னும் புனித பூமியில் உயிர் வாழ்கின்றது.

மட்டக்களப்பு மீன்பாடும் தேன்நாட்டில் மந்திரம் ஒலிக்காத ஊர்களும் இல்லை. மந்திரத்தை மதிக்காத மக்களும் இல்லை. ஊருக்கு ஒரு சிறு தெய்வ ஆலயங்கள் கண்ணகி அம்மன், மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மன் என ஒரு ஆலயம் இல்லா கிராமங்களே இல்லை.

ஆனால் பாரம்பரிய சமய முறை இன்று ஆகமத்துடன் கலப்பது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதாக அமையாமல் பாரம்பரிய முறைகளை களையெடுக்கும் பணிகள் இடம்பெறுகின்றது. அதுவும் ஒரு பூசாரி சமயம் சமயம் என்று அரசியல் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மட்டக்களப்பில் மேவின் ஆகியுள்ளார்.

இந்து மக்களின் நம்பிக்கையை உடைக்கும் அராஜக செயல் மூலம் முன்னேஸ்வரத்தில் மேவின் சில்வா காட்டிய ஆராஜகம் அடக்குமுறை சரியென்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவெட்டுவான் ஸ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் பலிப்பூசையை தடுத்துள்ளார்.

இந்து சமய சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பூசைகளில் பலிப்பூசை முக்கியத்துவம் வாய்ந்தாக அமைகிறது. பாரம்பரிய பூசை முறைகளை தாங்கியுள்ள பத்தாசிகளும் பலிப்பூசையை வலியுறுத்தியுள்ளது. காளியம்மன் பூசை முறைகளை கூறும் கும்பத்தாசியும், அடைக்கலபத்தாசியும் பலிப் பூசையை வலியுறுத்தியுள்ளது.

ஆனால் அதை தடுத்து யாகம் நடத்தி பூசை செய்துள்ளார் யோகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர். பிரசித்தி பெற்ற ஏறாவூர் காளியம்மன் ஆலயம் மட்டக்களப்பு புன்னச்சோலை ஆலயம் போன்ற ஆலயங்களில் கூட பலிபூசை இடம்பெற்றுவரும் நிலை தமிழரின் பாரம்பரியத்தின் மண்வாசனை வீசும் விளாவெட்டுவானில் அராஜகத்தை இந்து சமய பாரம்பரியத்திற்கு எதிராக அரங்கேற்றியுள்ளார். இது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல இந்துக்கள் கிளர்ந்தெழ வேண்டிய விடயமாகும்.

இது தொடர்பாக விளாவெட்டுவான் மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் எதிர்காலத்தில் அம்மனின் கோபத்தில் தமக்கும் ஏதேனும் நோய்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். வரலாறுகளும் அதையே உண்மை சம்பவங்களாக நிருபித்துள்ளன.
இன்று அரசு ஆலயங்களை இடிக்கிறது என்று முழக்கமிட்டால் போதுமா? அதைவிட கேவலமான செயல் சைவசமய பாரம்பரியத்தை ஒடுக்குவது என்பதை பூசாரி மறந்து விட்டாரா? இந்து சமயத்தின் ஆணிவேராக இருப்பது நம்பிக்கையே.

பிரணவன் தயானன்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com