நீர்கொழும்பு நகரில் உள்ள பெரும்பாலான பிரதான வீதிகளும் ஒழுங்கைகளும் கார்பட் போடப்பட்டும் கொங்கிறீட் இடப்பட்டும் சிறப்பான முறையில் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில்வாராந்த சந்தைகள் இடம்பெறும் வீதிகள் புனரமைப்பு செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதாக நகர மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிரதேச மக்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, நீர்கொழும்பு ரயில் நிலையம் அமைந்துள்ள சனிக்கிழமை இரவு சந்தை இடம்பெறுகின்ற வீதி, காமச்சோடை வராந்த சந்தை நடைபெறும் வீதி ஆகியன நீண்ட காலமாகவே மிகவும் சேதமடைந்த நிலையில் காhணப்படுகின்றன இவ்விரு வீதிகளிலும் சந்தை நடைபெறாத நாட்களிலும் வாகனப் போக்குவரத்து இடம்பெறுகின்றன. பாதசாரிகளும் இவ்வீதிகளை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.
நீர்கொழும்பு நகரில் உள்ள வீதிகளும் ஒழுங்கைகளும் அண்மையில் மிகத்துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டன. ஆயினும் நகர மத்தியில் வர்த்தக பிரதேசத்தில் அமைந்துள்ள வீதிகள் இரண்டும் பழைய நிலையிலேயே குண்டும் குழியுமாக காணப்படுவது வியப்பை தருகின்றது.
மேற் குறிப்பிட்ட இரு வீதிகளிலும்; வாராந்த சந்தைகள் நடைபெறுவதால் நீர்கொழும்பு மாநகர சபைக்கு அதிகமான வருமானம் ஈட்டித்தரும் வீதிகளாகவும் இவை உள்ளன. இவ்விரு வீதிகளும் அமைந்துள்ள இடங்களில் மக்களின் இருப்பிடங்கள் இல்லாமல் இருக்கலாம். அதன் காரணமாக தேர்தலில் வாக்குகள் கிடைக்காமல் இருக்கலாம் .ஆயினும் நகர மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரண்டு வீதிகளையும் தொடர்ந்து பயன்படுத்தியே வருகின்றனர். ஆகவே, வெகுவிரைவில் இந்த இரண்டு வீதிகளையும் முழுமையாக புனரமைப்பு செய்யுமாறு உரிய தரப்பினரிடம் வேண்டுகின்றோம் என்றனர்.
No comments:
Post a Comment