Tuesday, October 18, 2011

உணவு நஞ்சான சம்பவம் தொடர்பில் மூன்று அதிபர்கள் உட்பட அறுவர் கைது

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சானமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள தலவாக்கலை பொலிசார் ஐவரை கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் மெக்க்ஷி புரொக்டர் தெரிவித்தார்

. நேற்று முன்தினம் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியின் போது 580 மாணவர்கள் உட்பட 592 பேர் திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பாடசாலை அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் தமது பாடசாலை மாணவர்களையும் பங்கேற்கச் செய்த பாமஸ்டன் வித்தியாலயத்தின் அதிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ஐவர் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களில் நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர், கிரேட் வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், வயில்ட் பன்ட்ஸ் நிறுவனத்தின் இரு உறுப்பினர்கள் ஆகியோர் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட உணவு விநியோகஸ்த்தர் எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com