பாராளுமன்றில் இவற்றை பேசாமல் தெருக்கூத்து போடுவதில் என்ன லாபம்?
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இவ்வாரம் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகள் ஏன் உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஸ் குணவாத்தன கேள்வி எழுப்பினார்.
வடக்கில் இடம்பெறும் காணிப்பதிவுகளை நிறுத்துமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகள் வவுனியாவில் நேற்ற உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பல சந்தர்ப்பங்கள் உள்ளன. முக்கியமாக கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருகின்றன. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட விடயம் குறித்து பேச்சு நடத்தியிருக்கலாம், தீர்வையும் எட்டியிருக்கலாம் மேலும் இவ்வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை பேச முடியும். அதனை விடுத்து ஏன் இவ்வாறு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கேட்கிறோம். தமிழ் தேசிய கூட்மைப்புக்கு தமது பிரச்சினைகளை குறித்து கூறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்ற நிலையில் ஏன் இவ்வாறு மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவேண்டும் என்பதே எமது கேள்வியாகும் என்றார்
No comments:
Post a Comment