சிட்னி தடுப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை
தீபாவளியன்று சமயச்சடங்கில் பங்கேற்க அவுஸ்திரேலிய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னி தடுப்பு முகாமில் தற்கொலை செய்த கொண்டுள்ளார். சிட்னி குடிவரவு வதிவிட வீடமைப்புத் தொகுதியில் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இவர் மருத்துவ மனைக்குகொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலியகுடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை மூன்று மணியளவில் இவர் மரணமாகியுள்ளார். இவரது மரணம் இடம்பெற்ற சூழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வில்லாவூட்தடுப்பு முகாமில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த நான்கு தற்கொலைகளை அடுத்து கூரை மீதேறி போராட்டம் நடத்தியவர்களில் நேற்று உயிரிழந்த இளைஞரும் ஒருவராவார்.
சூட்டி என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட இவர் அனைவருடனும் நட்புடன் பழகக்கூடியவர் என்றும் அனைவருக்கும் உதவும் மனப்பாங்கு உடையவர் என்றும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் தெரிவித்துள்ளார். எனினும் இவரது முழுப்பெயர் மற்றும் சொந்த இடம் பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இன்னமும் வெளியிடவில்லை மரணமான இளைஞரின் உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்களுக்குத் தகவல் பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடிய இவர் முன்னதாக வில்லாவூட் தடுப்ப முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் இவருடைய இளைய சகோதரன் இலங்கையில் வாழ்வதாகவும் அதிகரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே இவரது மரணம் மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வெளியாகியிருந்த செய்தி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment