சம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது! -திருமலை அமுதன்
இறந்த முஸ்லிம் ஒருவரின் காணிக்கு கள்ள உறுதி முடித்து திருமலை லிங்கநகரிலுள்ள 56 தமிழ் குடும்பங்களிடம் இரண்டுகோடியே நாற்பது லட்சம் கோருகின்றார் சம்பந்தன்
தமிழரசுக் கட்சியினாலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் ஈழத் தமிழர்களுக்கு அறிமுகமானவர் இரா சம்பந்தன். தமிழினத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு வெற்றிடங்கள் ஏற்பட சம்பந்தன் தமிழினத்துக்குத் தலைவர் ஆகிவிட்டார். இவர் தமிழினத்துக்காக இதுவரை எந்தத் தியாகத்தையும் செய்தது கிடையாது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுவார். தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இவரது வளர்ச்சிக்கு உதவி வந்தது. இறுதியாக தலைமைக்குப் பஞ்சம் எற்பட்ட இந்தப் பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகளின் புண்ணியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக்கும் தலைவர் ஆனார் சம்பந்தன்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிதான் தமிழ் இனத்தின் அதி உயர்ந்த பதவியாகும். ஈழத்தில், அதற்கும் மேலான பதவி மந்திரி பதவியாகும். டக்ளஸ் தேவானந்தாவும், விநாயகமூர்த்தி முரளீதரனும் எம்.பி. பதவியையும் தாண்டி மந்திரிப் பதவியை வரித்துக்கொண்டுள்ளனர். பதவிகளை அடைய சம்பந்தன் போன்றவர்களுக்கும் விருப்பம்தான். ஆனால் தமிழர்கள் துரோகி என்று கூறி முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயத்தினால் இந்த எம்.பி. பதவியே போதும் என்று கண்டனர். சம்பளமும், சலுகைகளும் கூடவே அதிகாரமும் கிடைக்கும் போது இதனை எக்காரணம் கொண்டும் நழுவவிடாது பார்த்துக் கொண்டு மேலும் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பது இவர்களது குறிக்கோள் ஆகும்.
சம்பந்தனின் குட்டுக்கள் யாவும் வெளிவந்துகொண்டிருக்கிற நிலையில் நான் செல்லாக்காசாக நடுத்தெருவில் வீசப்படுமுன்னர் முன்னர் கோடிகளைச் சம்பாதித்து விட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் உறுதியான முடிவுடன் செயற்பட ஆரம்பித்துவிட்டார். அதிலும் நேர்வழியிலல்ல! குறுக்கு வழியில்! குறுக்கு வழி என்றும் சொல்ல முடியாது, அப்பட்டமான மோசடி என்றுதான் சொல்ல வேண்டும்.
விடுதலைப் போராட்டம் என்று ஆரம்பித்த காலம் தொட்டு இடம்பெற்ற வன்செயல்களின் பெயரால் திருகோணமலை மாவட்டம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. திருகோணமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் வெடித்தபோது மக்கள் பலர் கொல்லப்படுவதும் எஞ்சியவர்கள் திருகோணமலை நகருக்குள் வந்து அவர்களது உறவினர்கள், நண்பர்களது வீடுகளில் தங்கியிருப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.
திருகோணமலையில் 'லிங்கநகர்' என்ற பகுதியை அனைவரும் அறிந்திருப்பர். திருகோணமலை நகரிலிருந்து லிங்கநகர் சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஓர் வசதிப்படைத்த தமிழ் பேசும் முஸ்லிம் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் ரசூல். அவருக்கு லிங்கநகரில் ஆறு ஏக்கர் நிலம் இருந்தது. இவர் 1981ஆம் ஆண்டு நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தனர். அந்த இருவரும் புத்தளத்தில் இருக்கும் அவர்களது தென்னந்தோப்பைப் பார்வையிட்டுக் காரில் திரும்பி வரும்போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். கணவர் இறந்த அடுத்த ஆண்டே வாரிசான இருவரும் இறந்தபடியினால் மேற்சொன்ன ஆறு ஏக்கர் நிலத்துக்கும் உரிமை கோர யாரும் இல்லாது போய்விட்டது.
1983ஆம் ஆண்டு இனக் கலவரம் நடந்த போது லிங்கநகரிலிருந்த பல தமிழர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு சிங்கள இனத்தவர் லிங்கநகரில் குடியேறினர். 1983ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டுவரை சிங்கள இனத்தவர் குறிப்பிட்ட முஸ்லிம் நபரின் அந்த ஆறு ஏக்கர் நிலத்தில் வாழ்ந்து வந்தனர்.
2000த்துக்குப் பின்னர் சிங்கள இனத்தவர் லிங்கநகரில் குடியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று அறிந்து அந்த நிலங்களை தமிழர்களுக்கு விற்றுவிட்டு இடம்பெயர முற்பட்டனர். அவர்கள் அந்த நிலத்தில் வாழ்ந்ததற்கான அனுபவ உரிமையை ((enjoyment rights) உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்தனர். மூதூர், கட்டப்பறிச்சான், ஈச்சலம்பத்தை, சம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் இடம்பெயர்ந்து இருக்க இடமில்லாது திருமலை நகரில் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இந்த நிலங்களை சிங்கள இனத்தவரிடமிருந்து பெற்று தங்களது பெயரில் பதிவு செய்து அந்த நிலத்தில் வீடுகட்டி கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சிங்கள இனத்தவரிடமிருந்து ஐந்து முதல் எட்டு லட்சங்கள் கொடுத்து வாங்கி வீடுகள் கட்டினர்.
இந்த நிலம் மறைந்த திரு. ரசூல் அவர்களுக்குச் சொந்தமானது என்ற விடயம் அனைவருக்கும் தெரிந்ததே, உரிமை கோர அவருக்கு யாரும் இல்லாதபடியால் சிங்களவர் இதனை ஆக்கிரமித்தனர். அவர்களிடமிருந்து தமிழர்கள் குறிப்பாக திரு. சம்பந்தனுக்கு இன உணர்வில் வாக்களித்த தமிழர்கள்தான் விலை கொடுத்து வாங்கிப் பதிவு செய்தனர். இவ்விதம் 56 தமிழ்க் குடும்பங்கள் இந்த நிலங்களை விலைக்குப் பெற்றுள்ளனர். இந்தக் குடும்பங்கள் தங்களது சொந்த வீடுகளை கலவரங்களின்போது பறிகொடுத்துவிட்டு, பின்னர் இருந்த பணத்தைக் கொண்டு காணிகளை யாரிடமோ வி லைக்கு வாங்கினர். 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இந்த லிங்கநகரில் இன்றும் ஐந்து சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள், மூன்று இஸ்லாமியத் தமிழ்க் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆவணி மாதத்தில் சம்பந்தனின் முதிர் மகனுக்கு திருமணம் நடந்தது. இந்த விழாவுக்காக சம்பந்தன் சில நாட்கள் திருகோணமலையில் தங்கினார். திருமணம் முடிந்ததும் சம்பந்தனது கையாள் என்று சொல்லப்படும் சம்பூரைச் சேர்ந்த வோட்டர் சப்பிளை யோகராசா அல்லது யோகன் என்பவர் லிங்கநகரிற்கு விஜயம் செய்தார்.
அங்கு வாழ்ந்து வரும் முக்கிய குடும்பங்களை அழைத்து இந்த ஆறு ஏக்கர் நிலமும், சம்பந்தன் ஐயாவுக்குச் சொந்தமானது, நீங்கள் யாரைக் கேட்டு இவற்றில் வீடு கட்டினீர்கள் என்று ஓர் குண்டைத் தூக்கிப் போட்டார். அந்த மக்கள் இடிவிழுந்தவர்கள் போன்று சிந்தை கலங்கி நின்றனர்.
சற்று நேரத்தில் யோகன் ஆரம்பித்தார், சரி கட்டினது கட்டியாகிவிட்டது. நான் ஐயாவுடன் கதைத்து உங்களுக்கு இந்த நிலத்தை வாங்கித் தருகிறேன் நீங்கள் ஒரு பேர்ச்க்கு 25,000 ருபா சம்பந்தன் ஐயாவுக்கு கொடுக்க வேண்டும், அதோடு என்னையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஓர் மாற்று வழியை வகுத்து வழங்கினார். இடிவிழுந்த மக்களை வெள்ளம் அள்ளிச் சென்றது போல் இருந்தது யோகனின் மாற்றுவழி!
சம்பந்தன் ஐயாவா இப்படிக் கேட்கிறார். இருக்காது, அப்படி எதுவும் நடந்திருக்காது. யோகன் பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கப் பார்க்கின்றார் என்று நினைத்து அந்த 56 குடும்பத்தினரும் ஒன்று கூடி சம்பந்தன் ஐயாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.
பல தடவைகள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும், அவர் நித்திரை கொள்கிறார் என சளைக்காமல் பதில் கூறி வந்தாராம் மறுமுனையில் பேசிய உதவியாளர். இந்த நிலத்தில் குடியிருப்பவர்கள் ஒன்றும் படிப்பறிவில்லாத குடும்பத்தினர் அல்ல. நன்கு படித்த, பட்டம் பெற்ற அரசுத்துறையில் பணியாற்றியவர்கள்தான் குடியிருந்து வருகிறார்கள்.
இறுதியில் தொலைபேசியில் சம்பந்தன் ஐயாவை பிடித்துவிட்டனர். சம்பந்தன் ஐயா மிகத் தெளிவாகப் பேசினார். யோகராசாவை நான்தான் அனுப்பினனான், அந்தக் காணியின் உறுதிப் பத்திரம் என்னிடம்தான் இருக்கிறது. நீங்கள் எனக்குத் தெரியாமல் அதுல அத்துமீறி வீடுகட்டியிருகிறீர்கள். இதில வேறு யாராவது வீடு கட்டியிருந்தால் நடக்கிறதே வேற. சரி நீங்கள் எல்லாம் தமிழர்களா இருக்கிறபடியால் உங்களுக்கே அந்தக் காணியத் தாறன். நீங்கள் ஒரு பேர்ச்சுக்கு 25,000 ரூபா தாருங்கோ! எனக்கு திருகோணமலைக்கு வாறதுக்கு நேரமில்லை. சட்டத்தரணிகளும் அங்க இல்ல. அதனால் நீங்கள் அந்தக் காசை எனது வங்கியில் கட்டிப் போட்டுச் சொல்லுங்கோ. நான் உறுதி முடிச்சுத் தாறன்' என்ர சட்டத்தரணிகள் எல்லாரும் கொழும்பில்தான் இருக்கினம். காசு குடுத்தால் உறுதி முடிச்சு தாறன் சும்மா என்னத் தொல்லைப் படுத்தாதேங்கோ என்று கூற, எந்த வங்கியில் ஐயா காசைப் போடுறது? என்று கேட்டதற்கு எந்த வங்கியில என்றாலும் போடுங்கோ எனக்கு எல்லா வங்கியிலயும் எக்கவுண்ட் இருக்கு என்று கூறி தொப்பென வைத்தாராம் தொலைபேசியை!
56 குடும்பங்கள், ஒரு பேர்ச்சுக்கு 25,000 ரூபா, ஒரு பேர்ச் என்பது (perch) 272.25 சதுர அடிகளைக் கொண்டது. ஒரு ஏக்கர் 160 பேர்ச்சுக்கள், ஆறு ஏக்கர் நிலத்துக்கும் சம்பந்தன் ஐயா கேட்பது
ஒரு பேர்ச் - 272.25 சதுரஅடி ரூபா 25,000
ஒரு ஏக்கர் – 43,560 சதுரஅடி ரூபா 40,00,000
ஆறு ஏக்கர் நிலத்தின் விலை ரூபா 2,40,00,000
இரண்டு கோடியே நாற்பது இலட்சம் ரூபாயை சம்பந்தன் ஐயா கேட்கிறார்! யாரிடமிருந்து? அகதிகளாக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து! சரி இந்த நிலம் சம்பந்தன் ஐயாவுக்கு சொந்தமானதா? அதுவும் இல்லை! அந்த நிலத்துக்கான உறுதிப்பத்திரம் தன்னிடத்தில் இருப்பதாகத்தான் சொன்னாரே தவிர தான் விலைக்கு வாங்கி உறுதி எழுதி வைத்து வரிகட்டி வருகிறேன் என்று சொல்லவில்லை.
இந்த நிலம் பற்றி லிங்கநகரில் இன்றும் வசித்துவரும் இஸ்லாமியக் குடும்பத்தினரிடம் வினவியதில், ரசூல் பாய் நல்ல பணக்காரர் என்றும், அந்த உறுதியை அடமானம் வைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டிய தேவை அவருக்கு இருந்ததில்லை என்றும், அவருக்கு இன்றும் பல சொத்துக்கள் திருகோணமலை, புத்தளம் மற்றும் கொழும்புப் பகுதிகளில் இருப்பதாகவும் இஸ்லாமியக் குடும்பத்தினர் கூறினர். ரசூல் பாய் குடும்பத்தினர் பஸ்களிலோ, புகையிரதத்திலோ பயணம் செய்வதில்லை, எப்போதும் அவர்கள் கார்களில்தான் பயணம் செய்வார்கள். அந்த அளவு வசதிபடைத்தவர்கள் என்றும், இதில் ஏதோ மோசடி நடந்து இப்போது எங்கட எம்.பி. இப்படிக் காசுபறிக்க முயற்சிப்பது அல்லாவுக்கு அடுக்காது என்றும் எல்லாத்தையும் அல்லா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்று தங்களது வேதனையைத் தெரிவித்தனர்.
லிங்கநகர் காணியில் குடியிருக்கும் அப்பாவித் தமிழர்களது குடும்ப விபரங்கள் கீழே:
(01) அருட்பிரகாசம் – ஜமுனா,
(02) சிவபாதம் – சுமதி,
(03) பொன்னம்பலம் – மல்லிகா,
(04) குருகுலசிங்கம் – மகாலெட்சுமி,
(05) சிவலிங்கம் – செல்லநாச்சியார்,
(06) செல்லத்தம்பி – துளசிமணி,
(07) கணகசிங்கம் – உதயராணி,
(08) பற்றீக் – ஸ்ரெலர்,
(09) பேரின்பராசா – ராசகுலசிங்கம்,
(10) தேவலிங்கம் – நீத்தா,
(11) தேவலிங்கம் – தேவவதனா,
(12) கந்தையா – சண்முகநாதன்,
(13) இராசதுரை – வணசா,
(14) இராசையா – தட்சணாமூர்த்தி,
(15) செல்வநாயகம் – அருள்கிருபாகரன்,
(16) செல்வநையினார் – இராதாமோகன்,
(17) தயாபரன் – வனிதா,
(18) உதயகுமார் – அன்னலட்சுமி,
(19) ஜெயானந்தன் – ஜெசிகா,
(20) மகேஸ்வரன் – தேவசீலி,
(21) சந்திரமோகன் – தேவமனோகரி,
(22) சூசைப்பிள்ளை – ஜோதிமலர்,
(23) ரஞ்சன் – கோமளாதேவி,
(24) நாகராசா – நவரெத்தினம்,
(25) முத்துராசா – ஃப்பிரியா,
(26) ரட்ணராசா – வேணுகுமாரி,
(27) சுகுணசேகரம் – குமாரதாஸ்,
(28) விபுணசேகரனம் – அருள்மணி,
(29) சுந்தரலிங்கம் – வித்தியா,
(30) தேவலிங்கம் – தேவகாஞ்சனா,
(31) நகுலேஸ்வரன்,
(32) விசாகரெத்தினம் – ஃநிவாசன்,
(33) ஞானநேகரம் – லிரோஜிதா,
(34) பேச்சுமுத்து – இராமநாதன்,
(35) சந்திரகுமாரன் – நந்தகுமாரன்,
(36) இராமநாதன் – குணரெத்தினம்,
(37) சுவேந்திரலிங்கம் – சரோஜாதேவி,
(38) இருதயநாதன் – வள்ளியம்மை,
(39) ஆறுமுகம் – இராஜசுந்தரம்,
(40) இராமச்சந்திரன் – உதயகுமார்,
(41) நடராசா,
(42) N. திருச்செல்வம்,
(43) மாதவன்,
(44) சந்திரலிங்கம் – பரிமளாதேவி,
(45) ஜெயவீரசிங்கம் – சூரியபிரகாஸ்,
(46) விஜயகுமார் – வேதநாயகம்,
(47) வைரமுத்து – நாகராசா,
(48) செளந்தரிப்பிள்ளை – நாகராசா,
(49) பாலச்சந்திரன் – ரஞ்சனி,
(50) சுசிகரன் தாத்தயசீலி,
51) மரியநாயகம் – ஜெராட்தனிநாயகம்,
(52) செபமாலை – பீலிக்ஸ் செல்வராசா,
(53) கேசவன் – தங்கத்துரை,
(54) மோகன் – விஜயா,
(55) கு. நாகேஸ்வரி,
(56) சிவபுண்ணியம் – லிங்காரெத்தினம் – ஜோதிமகாலெட்சுமி
சம்பந்தனுக்கும் இந்தக் காணிக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. தன்னிடத்தில் அடி உறுதி இருக்கிறது என்று கூறும் சம்பந்தன் இதில் ஏதோ மோசடி செய்துள்ளார். உறுதி வைத்திருக்கும் நபர் ஒருவர் அந்த நிலத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியாது!
இந்த உறுதி ஏதோ ஓர் விதத்தில் சம்பந்தனது கைக்குச் சென்றிருக்கலாம் அது ரசூல் பாயின் மரணத்துக்குப் பிறகு அவரது வீட்டிலிருந்து திருடப்பட்டிருக்கலாம். அல்லது நீதிமன்றம் தொடர்பான வழக்குக்காக யாராவது சட்டத்தரணியிடம் இந்த உறுதி சிக்கியிருக்கலாம். அந்தச் சட்டத்தரணி மூத்த சட்டத்தரணியான சம்பந்தனிடம் ஒப்படைத்து இந்தப் பத்திரத்தைப் பயன்படுத்தி லாபம் பெறும்படி கையளித்திருக்கலாம்.
ரசூல் பாய் அவர்களுக்கு இது போன்று பல சொத்துக்கள் இருக்கிறபடியால் ரசூல் பாயின் மனைவியையும் குழந்தையையும் விபத்து என்ற நிகழ்வினால் அவர்கள் கொல்லப்பட்டு இதுபோன்ற சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள் நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்றும் குடியிருக்கும் மக்கள் தங்களுக்குள் கதைத்துக் கொள்கிறார்கள்.
புத்திசாலித்தனமாக மோசடி செய்பவர்கள் பலர் நம் இனத்தில் இருக்கின்றனர். புத்தியே இல்லாமல் ஏமாற்றும் நபர்களும் நம் இனத்தில் வாழ்கின்றனர். புலிகள் இருக்கும் போது சம்பந்தன் இதுபோன்று காணிக்கோரிக்கையை வைத்து தனது பணப்பறிப்பை நடத்தியிருக்கலாம். தமிழர்களிடத்தில் வாக்கு வாங்குவதும், அரசிடத்தில் கிம்பளம் வாங்குவதும் கடந்த அறுபது ஆண்டுகளாக நடந்து வரும் மோசடிதானே! இவர்களுக்கு இதில் எல்லாம் என்ன இன உணர்வு வந்துவிடப் போகிறது? காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதைச் சரியாகப் பயன்படுத்துகிறார் சம்பந்தன். ஈழத்தில் வாழ்ந்த எந்தத் தமிழ்த் தலைவரும் இது போன்ற மோசடியைச் செய்தது கிடையாது.
83 ஆண்டிலிருந்து 2000 ஆண்டுவரை சிங்களவர் இருக்கும்போது உரிமை கொண்டாடாத காணிக்கு சம்பந்தன் இப்போது உரிமைகோருகின்றார். காணி உறுதியில் மோசடி செய்வதற்கு இத்தனை காலம் போய் இருக்கின்றது. எவ்வாறாயினும் 2000 ம் ஆண்டளவிலேயே இதற்கான சதி தீட்டப்பட்டிருக்கவேண்டும் என நம்பப்படுகின்றது. 1983 லிருந்து லிங்கநகரிலிருந்த சிங்களவருக்கு வராத அங்குசுறுத்தல் எவ்வாறு 2000 ம் ஆண்டில் வந்தது. 1999 - 2000 ம் ஆண்டுப்பகுதியிலேயே சம்பந்தனுக்கும் புலிகளுக்குமிடையேயான நெருக்கம் அதிகமானது. அதன்பின்னரே சம்பந்தனின் கள்ளக்காணியை மீட்கும்பொருட்டு புலிகள் அவர்களை விரட்ட ஆரம்பித்துள்ளனர். என்னசெய்வது புத்திசாலிகளான மக்கள் அதை விலைக்கு விற்றுவிட்டே சென்றுள்ளனர். இது சம்பந்தனின் காணி சிங்களவருக்கு காசு குடுக்காதிங்கோ என்று புலிகளால் அந்தநேரத்தில் கூட மக்களை மிரட்டமுடியாமல் போயுள்ளது காரணம். சம்பந்தனின் கள்ள உறுதி விடயம் அந்தநேரத்தில் வெளிவந்திருந்தால் அதற்கு அம்மக்கள் உரிய பதில் சொல்லியிருப்பர். ஏதோ 10 வருடம் பொறுத்திருந்தால் மக்கள் வழமைபோல் எல்லாம் மறந்துவிடுவர் என்பது வக்கீல் ஐயாவின் கணிப்பாக இருக்கலாம்.
மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ், கொழும்பு என்று தமிழ்த் தலைவர்களுக்கு சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றை அந்தத் தலைவர்களது பேரன்கள், பேத்திகள் இன்றும் அனுபவித்து தமிழர்களுக்கு வித்தைகள் காண்பித்து வருகின்றனர். ஆனால் சம்பந்தன் ஐயாவோ வீழ்ந்தாரை ஏறி மிதித்து பணம் பறிக்க முற்பட்டு உள்ளார்.
சாதாரணமாக ஓர் ஏமாற்றுக்காரனுக்குத்தான் இது போன்ற மோசடியில் ஈடுபடத் துணிவு வரும். 'எல்லாவற்றையும் கோணேஸ்வரன் மலையில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த மோசடிக் காரருக்கு ஈஸ்வரன் தக்க தண்டனை கொடுப்பான். அதுவரை நாம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் சம்பந்தன் இப்போது ராஜபக்சேயுடன் நல்ல நட்புணர்வோடு செயல்படுகிறார். சிலவேளை இராணுவத்தை அனுப்பி எங்களை அடித்து வெளியேற்றவும் முயற்சிக்கலாம். எனவே அவர் கேட்கும் லஞ்சப் பணத்தைக் கொடுத்தாவது எங்கள் வீடுகளை இடிக்காமல் காப்பாற்றலாமா?' என்றும் சிலர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த உண்மையை யாரிடம் சொல்லி நீதி கேட்பது? சாரையின் வாயினுள் தேரை வீடு கட்டின கதையாகிவிட்டது லிங்கநகர் மக்களின் நிலை.
0 comments :
Post a Comment