Friday, October 14, 2011

குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!

சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள சக இளவரசர் ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக, குவைத் இளவரசர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. குவைத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இளவரசர் ஷேக் ஃபைஸல் அல் அப்துல்லாஹ் அல் சபாஹ் என்கிற அரச குடும்பத்து இளவரசர் தன் சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா அல்சலிம் என்கிற மற்றோர் இளவரசரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியான இளவரசர் ஷேக் ஃபைஸல் குவைத் இராணுவத்தில் 'கேப்டன்' அந்தஸ்தில் பணிபுரிபவர் ஆவார்.

கடந்த 2010 ஜூன்மாதம் கொலையுண்ட ஷேக் பாசிலைக் காண அவரது அரண்மனைக்கு வந்த ஷேக் ஃபைஸல் 'உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரை சற்று வெளியே அழைத்ததாகவும், அதன் பின் ஒருசில நிமிடங்களில் துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு மற்றவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, இரத்தவெள்ளத்தில் ஷேக் பாசில் கிடந்ததாகவும், அவசரமாக முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றும் பலனின்றிப் போனதாம்.

அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காததால், ஷேக் பாசிலின் கொலைக்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

கொலையுண்ட இளவரசர் ஷேக் பாசில், 1977 வரை குவைத் மன்னராக இருந்த ஷேக் சபாஹ் சாலிம் அல் சபா வுடைய பேரனாவார். அவருடைய தந்தை ஷேக் சாலிம் 1975 வரை அமெரிக்கா, கனடா, வெனிசுலா நாடுகளில் தூதராகப் பொறுப்புவகித்தவர் ஆவார். அதன்பின் நாடு திரும்பி, மந்திரிசபையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தார். எனினும், அண்மையில் உடல்நலக் காரணத்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com