Thursday, October 6, 2011

வெள்ளைக்கொடி சர்ச்சை : உயர் நீதிமன்றில் விசாரணைகள் ஆரம்பம்

கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணொருவர் 2 வருடத்திற்கு பின்னர் முறைப்பாடு செய்தால் அதை ஏற்க முடியுமா? வெள்ளைக்கொடி வழக்கில் பிரதி சொலிசிட்டர் வினவினார் .
பிரதிவாதியின் சாட்சிகளில் ஒன்றான, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்கவின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வேறு எங்கேயும் கருத்துக்களை தெரிவிக்காது இந்த நீதிமன்றத்திலேயே அதுவும் ஒரு வருடத்திற்கு பின்னர் சாட்சியளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் தன்னை ஒருவர் கற்பழித்துவிட்டதாக பெண்ணொருவர் இரண்டுவருடங்களுக்கு பின்னர் முறைப்பாடு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியுமா என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹா நீதிபதிகளிடம் வினவினார்.

தன்னிடம் கூறாத விடயத்தை வைத்துக்கொண்டு பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் ஏன் செய்தியாக்கவேண்டும். அவ்வாறான செய்தியொன்று அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாயின் அதனை மறுக்காதது ஏன்? பொய்யான சம்பவம் தொடர்பில் பத்திரிகையில் செய்தி வெளியாகினால் யாராவது அமைதியாய் இருப்பாரா? என்று கேட்டதுடன் பிரதிவாதியின் தரப்பில் முன்வைக்கப்பட்ட சகல சாட்சியங்களையும் நிராகரிக்குமாறும் கோரி நின்றார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செயப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ,சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வரும் மேற்படி வழக்கில் பிரதிவாதி தரப்பில் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி ஆஜராகியிருந்தார். மனுதாரர் தரப்பின் வாய்மூல சமர்ப்பணம் நேற்று இரண்டாவது நாளாகவும் முன்வைக்கப்பட்டது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தனது இரண்டாவது நாள் சமர்ப்பத்தை முன்வைத்து தெரிவிக்கையில், பிரதிவாதியின் தரப்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதிநிதியான சுகுமா ரொக்வூட்டின் சாட்சி முன்வைக்கப்பட்டது. இவர் யார்? நோர்வே ஸ்கண்டிநேவிய நாடுகளிலிருந்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனத்திடமிருந்து 75 வீதம் நிதியுதவியை பெற்றுக்கொண்டு இயங்கும் நிறுவனத்தின் பிரதிநிதியாவார்.

2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊடக விருது தொடர்பிலும் அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த முதல் சாட்சியான பெற்றிக்கா ஜான்ஸிடன் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டபோது ஊடகவிருது வழங்கும் அரச சார்ப்பற்ற நிறுவனம் தொடர்பில் தான் திருப்திகொள்ளவில்லை என்றும் அதனை விமர்சித்து கட்டுரையும் எழுதியுள்ளதாக சாட்சியமளித்தார்.

அரச சார்ப்பற்ற நிறுவனத்திடமிருந்து நல்லெண்ணம் மற்றும் குறிக்கோளை காணமுடியாது. வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று செயற்படும் நிறுவனத்தின் பணமும், நல்லெண்ணம் மற்றும் குறிக்கோளுடன் பயன்படுத்தப்படும் என்பதையும் எதிர்பார்க்க முடியுமா? இதில் மனுதாரரின் சாட்சியினை சுகுமார் ரொக்வூட்டின் சாட்சி சவாலுக்கு உட்படுத்தவில்லை.

அதில் தவறில்லை
மனுத்தரப்பு சாட்சிகளை விசாரித்த பொலிஸ் அதிகாரி அனுர சில்வாவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற 40 மில்லியன் ஊழல் விவகாரத்தில் மேல் நீதிமன்றத்தினால் தண்டப்பணம் அறவிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய பிரதிவாதி தரப்பு விசாரணை செய்த அதிகாரியின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நீதிமன்ற வழக்குகளை முன்வைத்தது.

இதேவேளை, விசாரணை செய்த அதிகாரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கடும் குற்றச்சாட்டு பத்திரம் சட்டமா அதிபரினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் விசாரணை முன்னெடுக்கப்பட்ட ஏககாலத்தில் குற்றப்பத்திரிகை வாபஸ் பெறப்பட்டதை பிரதிவாதி தரப்பில் வாதமாக கொள்ளப்பட்டது. எனினும் அவ்விரண்டும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதில் தவறில்லை.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிக்கு அபகீரத்தியை ஏற்படுத்தும் வகையிலேயே மேற்கண்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கடும் குற்றச்சாட்டு பத்திரிகை வாபஸ் பெறப்பட்டமைக்கும் இந்த வழக்கிற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை.

5 நாட்களில் சர்வதேசமும் குழம்பிவிட்டன
ஐக்கிய நாடுகள் சபையில் சேவையாற்றிய பிலிப்ஹெல்ஸ்டன் தயாரித்த கடிதத்திற்கு பதில் கடிதம் தயாரித்தமைக்காகவே பேராசிரியர் ரஜீவ் விஜயசிங்க சாட்சியாக அழைக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி சண்டேலீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பிலேயே பிலிப்ஹெல்ஸ்டன் கடிதம் எழுதியிருந்தார்.

சண்டே லீடரில் வெளியான அந்த நேர்காணல் இலங்கையை மட்டுமல்லாது சர்வதேசத்தை குழப்பிவிட்டது. அதனால் தான் பிலிப்ஹெல்ஸ்டனுக்கு பதிலளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்பது உறுதியாகின்றது. அந்த நேர்காணல் தொடர்பில் பிலிப்ஹெல்ஸ்டன் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அதுவும் நேர்காணல் வெளியாகி 5 நாட்களில் பதில்கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார் என்றால் கட்டுரையில் இருக்கின்ற விடயம் எவ்வளவு பாராதூரமானது.

சாட்சியில் நம்பிக்கையில்லை
பிரதிவாதி தரப்பு சாட்சிகளில் ஒன்றான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாட்சி இந்த வழக்கிற்கு எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல. அவரது சாட்சியத்தை ஏற்கவே முடியாது. பத்திரிகையில் வெளியான செய்தி பெரும் குழப்பகரமானது என்பதனால் தான் தெளிவுப்படுத்துவதற்கான ஊடகவிலயாளர் மாநாடு நான்கு நாட்களுக்கு பின்னர் 17 ஆம் திகதி நடத்தப்பட்டது.

வழக்கின் பிரதிவாதி, பெற்றிக்கா ஜான்ஸ், லால் விக்ரமதுங்க மூவரும் உரையாடிக்கொண்டிருந்ததை கண்டதாகவும் அந்த உரையாடலுடன் தனக்கு நேரடியான தொடர்பில்லை என்றார். எனினும் சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்திதொடர்பில் சில வசனங்கள் பிரதிவாதியினால் கூறியது தனக்கு கேட்டதாகவும் சாட்சியமளித்தார்.

பிரதிவாதி நேர்காணல் வழங்கியுள்ளார்
அப்படியாயின், அத்தருணத்தில் கூட பிரதிவாதி முழுச்செய்தியையும் நிராகரிக்கவில்லை. பிரதிவாதியினால் கூறப்பட்ட வாக்கிய தொகுதி என்ன? என்பதனை சாட்சி தெரிவிக்கவில்லை அப்படியாயின் பெற்றிகாவுக்கு பிரதிவாதி நேர்காணல் வழங்கியுள்ளார்.

அனுரகுமாரவின் சாட்சி சுயாதீனமானதல்ல அது பக்கசார்பானது ஜனாதிபதி தேர்தலில் அவர் பிரதிவாதிக்கு ஆதரவளித்தார். பாராளுமன்ற தேர்தலில் பிரதிவாதி தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு அரசியல் கூட்டணியின் எம்.பியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதனால் அவரது சாட்சியம் பக்கசார்பானவையாகும்.

சாட்சியின் நம்பகத்தன்மையில் பெரும் சந்தேகம் எழுகின்றது. சம்பவம் 2009 ஆம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. அனுரகுமார திஸாநாயக்க சாட்சியமளிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரைக்கும் வேறெங்கும் கருத்து தெரிவிக்கவில்லை ஒரு வருடத்திற்கு பின்னர் முதன் முறையாக இந்த நீதிமன்றத்திலேயே தெரிவிப்பதாக சாட்சியமளித்தார்.

கற்பழிப்பு
நபரொருவரினால், தான் கற்பழிக்கப்பட்டுவிட்டதாக பெண்ணொருவர் இரண்டு வருடங்களுக்கு பின்னர் முறைப்பாடு செய்தால் அதனை ஏற்கமுடியுமா? என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாட்டில் மிக முக்கியமான தேர்தல் நடத்தப்பட்ட காலத்திலேயே இந்த செய்தி வெளியானது. ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திவெளியானால் அதனை நிராகரிக்கமாட்டீர்களா? குறைந்தது மறுக்க மாட்டீர்களா?

செய்தியானது, அரசியல் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று சாட்சியான அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். அப்படியாயின் பொய்யான சம்பவமொன்று பத்திரிகையில் வெளியானால் யாராவது அமைதியாக இருப்பார்களா?


எம்.பி ஏன் மறுக்கவில்லை
மக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகை, வாசகர்களுக்கு சரியான செய்தியை வழங்கவேண்டும். அவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்செய்தியை ஏன் மறுக்கவில்லை? இன்றேல் மறுக்குமாறு ஏன் கோரவில்லை என்பதனால் அவரது சாட்சியை ஏற்றுக்கொள்ளவேமுடியாது அச்சாட்சியை நிராகரிக்கவேண்டும்.

கரு எம்.பியின் சாட்சியை ஏற்கமுடியாது
அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கூறிய விடயங்கள் கரு ஜயசூரிய எம்.பிக்கும் பொருந்தும். பெற்றிக்கா ஜான்ஸ்க்கு பிரதிவாதி நேர்காணல் வழங்கவில்லை என்று கரு ஜயசூரிய கூறவில்லை. வேறு அர்த்ததுடனனேயே பிரசுரிக்கப்பட்டதாகவே தெரிவித்துள்ளார் இது முக்கியமான விடயமாகும். அவர் என்ன கூறினார்? எவ்வாறு அர்த்தம் மாற்றப்பட்டது என்பது முக்கியமானதாகும்.

எனினும், சாட்சியமளிக்கும்போது என்ன கூறினார் என்று தனக்கு கேட்கவில்லை என்றார். இந்த செய்தி அரசியலில் பெரும் பங்கத்தை விளைவித்திருந்தால் அந்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கேட்பதற்கு என்ன பயம்? இவ்வாறான நிலையில் பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட அத்தனை சாட்சியங்களையும் நிராகரிக்குமாறு கோரிநின்றார்.

வாசகரின் அபிமானத்தை பெறுவதற்கு
வாசகரின் அபிமானத்தை பெறவேண்டுமாயின் செய்தியின் முக்கியத்துவம் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும். இலங்கையிலிருந்து வெளியாகின்ற பத்திரிகைகள் பொய்யான தகவல்களை வேண்டுமென்றே முன்வைத்து பிரசுரிக்காது.

தன்னிடம் கூறப்படாத விடயமொன்றை பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஏன்? செய்தியாக்கவேண்டும். அவ்வாறு செய்யவே முடியாது. ஒரு பத்திரிக்கை இவ்வாறு செய்யுமாயின் வாசகரின் நம்பிக்கையை இழக்கவேண்டிவரும். பெற்றிக்கா ஜான்ஸ், களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதியதாக பிரதிவாதியும் சாட்சிகளும் எப்பொழுதுமே கூறவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் சண்டே லீடர் நிர்வாகம் பிரதிவாதிக்கே ஆதரவளிப்பதாக நிர்வாக ரீதியில் தீர்மானித்திருந்தது. அவ்வாறானதொரு தீர்மானத்தை எட்டியிருந்தால் அவரின் வெற்றிக்கே அந்நிறுவனம் உதவும். அதாவது பிரதிவாதியின் வெற்றிக்கு சார்பாகவே செயற்படும்.

ஐக்கிய தேசியக்கட்சி சண்டே லீடர் பத்திரிக்கை நிறுவனத்திற்கு 40 இலட்சம் ரூபாவை வழங்கியதாக பிரதிவாதியும் ஏற்றுக்கொண்டார். அதனால் அந்நிறுவனம் எக்காரணத்திற்காகவும் பிரதிவாதியிக்கு எதிராக செயற்பட்டிருக்காது.

நீதிமன்றுக்கு செல்லவில்லை
சண்டே லீடரின் ஆசிரியர் தனது 20 வருடகால சேவையில் நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்படவில்லை அதேநேரம் அவரது சாட்சியும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. பொய் சாட்சியமளித்ததாக நிரூபிக்கவும் இல்லை. அவர் பல பிரச்சினையான கேள்விகளுக்கு தடுமாறாமல் நேரடியாகவே சாட்சியமளித்தார். இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அங்கிருந்த ஊடகவியலாருக்கு தெரியும் என்பதனை தவிர வேறு சகல விடயங்களும் சாதாரணமானதாகும்.

தொனிப்பொருள் மாறாது
சண்டே லீடர் பத்திரிகையில் நகரபதிப்பு மற்றும் பிந்திய நகரப்பதிப்பு என இரண்டு பதிப்புகள் பிரசுரிக்கப்பட்டன. அதில் பிந்திய நகரப்பதிப்பில் சில விடயங்களை சேர்ப்பதன் மூலமாக செய்தியின் தொனிப்பொருளை மாற்றமுடியாது. என்பதுடன் பதிவு என்பது ஆங்கிலத்தில் வெவ்வேறான அர்த்தத்தை கொண்டதாகும் என்பதனால் நூற்றுக்கு நூறு வீதம் நேர்காணல் செய்யப்பட்டு அது குறிப்பேட்டில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. அந்த குறிப்பேட்டையும் பொய்யென கூறமுயலலாம் அப்படிசெய்வதற்கான தேவையென்ன? என்று பிரதிசொலிசிட்டர் ஜெனரல் வினவிய வேளையில் வழக்கு விசாரணை இன்று வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com