Monday, October 17, 2011

நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைவு என்கிறார் ரணில்

அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே 18ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான போராட்டத்தை தமது கட்சி விரைவில் தொடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தமது கட்சியைச் சேர்ந்தவர்களை ரணில் விக்கிரமசிங்க நேற்று சிறிகோத்தாவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போதே, அரசமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு எதிரான போரை தமது கட்சி நாடாளுமன்றத்தில் இருந்து ஆரம்பிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

. எதிர்க்கட்சித் தலைவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு முல்லேரியாவில் அரச தரப்பு அரசியல்வாதிகள் மோதிக்கொண்ட சம்பவமே பெரிய உதாரணமாகும். பொலிஸ் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியன சுயாதீனமாக இயங்குவதற்கு அரசமைப்பு வழங்கியிருந்த அதிகாரங்களை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜப்பக்க்ஷ கொண்டு வந்த 18ஆவது திருத்தம் இல்லாமல் செய்து விட்டது. இதனால் இந்த மூன்று துறைகளும் மேலும் மேலும் அரசியல் மயப்பட்டுப் போயுள்ளது என்று பரவலான குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.

அரசமைப்பின் இத்தகைய அரக்கத்தனமான பகுதியை நீக்குவதற்கான போராட்டத்தை நாடாளுமன்றத்தில் நாம் ஆரம்பிப்போம். பின்னர் அதனை மக்களிடம் எடுத்துச் செல்வோம். 18ஆவது திருத்தத்தை அகற்றும்வரை அது தொடரும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com