தலாய் லாமாவுக்கு தெ.ஆப்பிரிக்கா விசா மறுப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் பெருமளவு முதலீடு செய்து வரும் சீனாவின் கோபத்திற்கு ஆளாகவேண்டாம் என்று அஞ்சி தென் ஆப்பிரிக்கா திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா மறுத்துள்ளது. திபெத் மத தலைவர் தலாய் லாமா. பல லட்சம் திபெத்தியர்களின் கடவுளாக போற்றப்படுபவர். இன்று வரை திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வருகிறார்.
இவரது அரிய பணிகளை பாராட்டி, மகாத்மா காந்தி பெயரிலான சர்வதேச விருதை வழங்க தென் ஆப்ரிக்காவிலுள்ள ஒரு அமைப்பு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று அவர் தென் ஆப்ரிக்கா செல்வதாக இருந்தார்.
இதையடுத்து, தென் ஆப்ரிக்காவில் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விசா கேட்டு, டில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்நிலையில், தலாய் லாமா விருதைப் பெறுவதற்காக தென்ஆப்ரிக்காவுக்கு வந்தால் சீனாவின் கோபத்திற்கு ஆளாவோம் என்று அஞ்சிய அந்நாட்டு அரசு தலாய் லாமாவுக்கு விசா அளிக்க மறுத்து விட்டது. தென் ஆப்ரிக்க அரசின் இந்த முடிவு அங்கு பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
விசா மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தலாய் லாமா, தனக்கு விசா அளிப்பதில் தென் ஆப்ரிக்க அரசுக்கு சில வசதிக் குறைவு இருப்பதாக பெருந்தன்மையுடன் கூறியதோடு, தனது தென் ஆப்ரிக்க பயணத்தையும் ரத்து செய்தார்.
இதுகுறித்து தென் ஆப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு கூறுகையில், தென் ஆப்ரிக்க அரசு ஒரு இனத்தை ஒதுக்கும் செயலை விட மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தென் ஆப்ரிக்க வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள். இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment