Thursday, October 27, 2011

ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு. நிலவரங்கள் தொடர்பாக விரிவாக விளக்கம்.

ஜனாதிபதிக்கும், அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கவலையடைவதாகவும், அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிளார்ட், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 22 ஆவது பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிளார்டை சந்தித்து, இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

வடக்கு கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும புனர்வாழ்வு திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி, அவுஸ்திரேலிய பிரதமரை அறிவுறுத்தினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். இவ்வாணைக்குழுவின் அறிக்கை, விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது, எல்ரிரிஈ அமைப்பின் சில உறுப்பினர்கள், வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிராக நிதி திரட்டி வரும் விதத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அவுஸ்திரேலிய மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் செயற்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு, அரசாங்கம் தயாராகவுள்ளது. அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

பொதுநலவாய அமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பாக திருமதி கிளார்ட,; ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கச் செய்தார். 106 யோசனைகள் உள்ளடக்கப்படவுள்ளதனால், அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சில காலம் தேவையென, ஜனாதிபதி கூறினார்.

சட்டவிரோத ஆட்கடத்தல், குடியகல்வு ஆகியவற்றை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் ஆதரவு தொடர்பாக அவுஸ்திரேலிய பிரதமர், பாராட்டு தெரிவித்தார். வடக்கில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் ஆதரவிற்கு, ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மிக நட்புறவு ரீதியாக இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படுமென, இரு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயாஸ்தானிகர் திசர சமரசிங்க ஆகியோரும், அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com