மாணவர்கள் மிக நன்றாக படிக்க வேண்டுமா? சில டிப்ஸ்!!
என்ன படிப்பது? எங்கு படிப்பது?, தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் விரும்புகிறோர்களோ, இல்லையோ கல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாகி விட்டது. சமூதாயத்தில் ஒரு உயர்ந்த மதிப்பை பெறவும், பொருளாதார அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும், சிறப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும் கல்வி அவசியம். வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்தை படிப்பதற்காகவே ஒதுக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் சிறப்பான முறையில் படிக்க முக்கிய ஆலோசனைகள்:
படிப்பின் அவசியத்தை உணருங்கள்
மகிழ்ச்சியான இளமைக் காலம் கடந்த பிறகும், வாழ்க்கையில் உங்களை மகிழ்வுடன் இருக்க கல்வி உதவுகிறது. கல்லூரி வாழ்க்கையில், படிப்பையும் கடந்து சில கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவை உங்களது தகுதியை மேலும் உயர்த்துவதாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி காலத்தில் எப்போதும் விளையாட்டுத்தனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தால் பிற்காலத்தில் வரும் நெருக்கடியான தருணங்களில் வருந்த வேண்டியிருக்கும்.
திட்டமிடுங்கள்
ஒவ்வொரு பாடத்தையும் படிக்க ஆகும் நேரத்தை, திட்டமிட்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சிறப்பான திட்டமிடுதலும், அதன் அடிப்படையிலான சரியான செயல்பாடும் கடைசி நேர அவதிப் படிப்பிற்கான வாய்ப்பை முற்றிலும் தவிர்க்கும். திட்டமிட்ட சீரான உழைப்பு பதட்டத்தை குறைத்து, அமைதியான, ஆழ்ந்த செயல்பாட்டிற்கு அருமையாக வழிவகுக்கும்.
படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்யுங்கள்
திட்டமிட்டபடி படிப்பதற்கு, சாதகமான இடத்தை தேர்வு செய்வது மிக அவசியம். புல்தரை, பூங்கா, கல்லூரி வளாகம், மைதானம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இடத்தில் அமர்ந்து படிப்பதற்கு விருப்பமிருக்கும். தேவையான பல்வேறு புத்தகங்கள் கிடைப்பதாலும், அமைதியான சூழலாலும் சிலர் நூலகத்தில் படிக்க விரும்புவர். படிப்பில் முழு கவனம் செலுத்தவும், நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்தவும் உங்களுக்கு உகந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
மேலும் சில யுக்திகள்:
கவனக் குறைவு என்பது ராட்சத பூதம். நீங்கள் புதியதாக கற்கவும், கற்றதை திரும்ப வெளிக்கொணருவும் கவனக் குறைவு மிகப் பெரிய தடங்களாக இருக்கும். எனவே, எப்போதுமே இது தவிர்க்கப்பட வேண்டும். எந்த ஒரு கற்றலும், புரிதலும் உங்களது முழு விருப்பத்தால் நிகழ வேண்டுமே தவிர, யாருடைய கட்டாயத்தாலும் அல்ல.
படிக்கும் போது, அவற்றில் முக்கியமான கருத்துக்களை குறித்துக்கொள்ளுங்கள். திரும்ப படிக்கும் போது அவை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும் அனைத்தையும் அப்படியே எழுதக்கூடாது. முக்கியமானவற்றை மட்டும் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.
வகுப்பு முடிந்த பிறகு, நீங்கள் எடுத்த குறிப்புகளை திரும்ப படித்து, கவனித்தவற்றை உடனடியாக ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.
முக்கியத்துவத்தை பொறுத்து, எவற்றை முதலில் படிக்க வேண்டும் என்று வரிசைப்படுத்தி படியுங்கள்.
பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்த்து விடுங்கள்; இடைவெளி விட்டுவிட்டு படியுங்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இடையே 5 முதல் 10 நிமிட இடைவெளி விட்டு படியுங்கள்.
மாணவப் பருவத்திலேயே படிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுங்கள்; உங்களது கனவு பலிக்கும்.
0 comments :
Post a Comment