Wednesday, October 26, 2011

சீன ஊடுருவலைத் தடுக்க அந்தமான் தீவுப் பகுதிகளில் இராணுவத்தை குவிக்கிறது இந்தியா

இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலைத் தாண்டி இந்தியாவுக்கு வந்த எவ்வித ஆபத்தும், அந்தமானை கடந்து தான் இந்தியாவை தொடமுடியும் என்பதால், இப்பகுதி மீது சீனாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறை தாமதமாக உணர்த்தியும் உள்ளது.

இதையடுத்து தனது பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா இறங்கியுள்ளது. இதையடுத்து அங்கு 6 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர். இது தற்போது அங்கிருக்கும் வீரரர்களை விட 3 மடங்கு அதிகம். மேலும் ஒரு டஜன் போர் விமானங்களும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதுகுறித்து இந்திய ராணுவ பிரிகேடியர் பல்விந்தர் சிங் கூறுகையில், அந்தமான் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரித்தார். இவர்கள் அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவர் என்றும் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் சீனாவின் ஆதிக்கம் இப்பகுதியில் பரவாமல் இருக்க மேலும் பல யுக்திகளை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com