அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவன் எஸ். தவக்குமார் மீது குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் மறுபுறத்தில் யாழ் பல்கலைக் கழக சமூகத்தை கடுமையாக எச்சரித்துள்ளது.
அவ்வெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் தமிழ் அரசியல் என்ற மாயைக்கு அடிபணிய வேண்டாம் என நாம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழ் கூட்டமைப்பு இப்போது அமெரிக்காவினதும் இந்தியாவினதும் உதவியுடன் கொழும்பு அரசாங்கத்துடன் ஒருங்கிணைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. த.தே.ம.மு. தமிழ் தொழிலாளர்களையும் உழைப்பாளிகளையும் சுரண்டுவதற்காக தனியான முதலாளித்துவ அரசை அமைப்பதன் பேரில், தேசிய சுயநிர்ணய உரிமை என்ற தமது கோரிக்கைக்கு இதே சர்வதேச சக்திகளின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.
தோல்விகண்ட புலிகளின் முன்நோக்கில் இருந்து சிறந்த படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமது மூலோபாய நலன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவு வழங்கிய மேற்கத்தைய பெரும் வல்லரசுகளின் தயவையே, புலிகள் தமது தனியான முதலாளித்துவ அரசுக்கான பிரச்சாரத்தில் நம்பியிருந்தனர்.
சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் சோசலிச ஐக்கியத்தின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்த்தின் ஆதரவுடன் மட்டுமே, சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்ட முடியும்.
இதேநேரம் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு பல்வேறு வெளிச்சக்திகள் முயற்சித்து வருவதாக இராணுவத்தினருக்கும், யாழ் பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைக்கூலிகளைப் பயன்படுத்தி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக பலாலி இராணுவத் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ். பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையே யாழ் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஒருவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே தனிப்பிட்ட விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பாதுகாப்புத் தொடர்பான அச்சம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் அந்தச் செய்திக் குறிப்பு, மாணவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பில் வேண்டிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
´எந்தவிதக் குழப்பங்களும் இன்றி பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். நீண்ட காலமாகத் துன்பங்களை எதிர்கொண்ட யாழ் மாணவர்களின் கல்வியைச் சீர் குலைக்க எந்தவொரு சமூகவிரோத சக்திகளுக்கும் இடம் தரப்படமாட்டாது´ என்று, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்ததாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment