சவுதி தூதரை கொல்ல தீட்டப்பட்ட சதி திட்டம் முறியடிப்பு.
அமெரிக்க நகைச்சுவை நாடகம்: ஈரான் கிண்டல்!
அமெரிக்காவுக்கான சவுதி அரேபிய தூதரைக் கொல்ல தீட்டப்பட்ட சதித் திட்டத்தை, அமெரிக்க புலனாய்வுத் துறை முறியடித்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலையின் பின்னணியில் ஈரான் அரசு இருப்பதாகக் கருதும் அமெரிக்கா, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளதோடு, "இது ஒரு நகைச்சுவை நாடகம்' என கிண்டல் செய்துள்ளது.
சிக்கலில் உறவுகள்: பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் நாடுகளின் பட்டியலில், ஈரானை 1984 முதல் அமெரிக்கா வைத்துள்ளது. ஈரான் அணு உலை விவகாரங்கள், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானின் வியூகங்கள், தற்போதைய அரபு புரட்சியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மீதான ஈரான் விமர்சனம் ஆகியவை தொடர்ந்து இருதரப்பு உறவுகளை சிக்கலுக்குள்ளாக்கியே வந்திருக்கின்றன.
புதிய குற்றச்சாட்டு: இந்நிலையில், ஈரானை மேலும் தனிமைப்படுத்தும் விதத்தில் அமெரிக்கா புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது. அமெரிக்காவுக்கான சவுதி அரேபியத் தூதர் ஏடல் அல் ஜூபைர் என்பவரை, ஈரான் கொல்ல திட்டமிட்டது என்பது தான் தற்போதைய குற்றச்சாட்டு.
ஒருவர் கைது: இந்தத் திட்டத்தை அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ., கண்டுபிடித்து முறியடித்துள்ளது. கொலைத் திட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மன்சூர் அர்பாப்சியார், 56, என்பவர் நியூயார்க் விமான நிலையத்தில் கடந்த செப்., 29ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர், அமெரிக்கா, ஈரான் இரு நாட்டு குடியுரிமைகளும் கொண்டவர். குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய நாட்டவரான கோலம் ஷக்குரி என்பவர் தற்போது ஈரானில் உள்ளார். நேற்று முன்தினம் அர்பாப்சியார், நியூயார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்த விவரங்கள், எப்.பி.ஐ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் தடைகள்: இச்சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கான சவுதி தூதரை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்நாட்டின் மீது மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இச்சதித் திட்டம், சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டத் திட்டங்களுக்கு எதிரான செயல். இதுகுறித்து எங்கள் நட்பு நாடுகளுக்கு விளக்குவோம். இச்செயல், பல நாடுகளின் மீதான எங்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் சிக்கியுள்ளவர்கள், மெக்சிகோ போதை மருந்து கடத்தல் கும்பல்களில் இருந்து கொலைகாரர்களை கூலிக்கு அமர்த்த முயன்றுள்ளனர். இவ்வாறு ஹிலாரி கூறியுள்ளார்.
பிரிட்டன் ஆதரவு: சதித் திட்டம் முறியடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், "சதித் திட்டத்தின் பின்னணியில் ஈரான் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்கும்' என்றார்.
ஈரான் கிண்டல்: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் அலி லரிஜானி கூறியதாவது: இது, குழந்தைத் தனமான விளையாட்டாக இருக்கிறது. குற்றச்சாட்டுகள் கீழ்த்தரமானவையாக உள்ளன. தங்கள் சொந்தப் பிரச்னைகளை மறைப்பதற்காக ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்குகிறது அமெரிக்கா.
நாங்கள் சவுதியுடன் நல்ல நட்புறவில் தான் இருக்கிறோம். இதுபோன்று செயல்பட ஈரானுக்கு எவ்வித அவசியமும் இல்லை. இவ்வாறு லரிஜானி தெரிவித்தார்.
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரமின் மேமன்பரஸ்ட் கூறுகையில், "இந்த நகைச்சுவை நாடகம் அமெரிக்காவால் இட்டுக் கட்டப்பட்டது' என்றார்.
உஷார் நிலை: வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகம், அமெரிக்காவின் முயற்சிக்குப் பாராட்டும் ஈரானின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. பரபரப்பான இந்தக் காட்சிகளுக்கிடையே, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் தங்கள் பயணங்களில் உஷாராக இருக்கும்படியும், அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொலைக்கு கூலி 1.5 மில்லியன் டாலர் : அமெரிக்க போதை மருந்து தடுப்பு ஆணையத்திற்கு மெக்சிகோ போதை மருந்து கும்பல்களில் துப்பு சொல்பவர்கள் - உளவாளிகள் பலர் இருப்பர். அப்படி ஒரு நபரும், அர்பாப்சியாரும் கடந்த மே மாதம் சந்தித்தனர். அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரகத்தைத் தகர்க்கத் தேவைப்படும் வெடி பொருட்கள் பற்றிய விவரங்களை உளவாளியிடம் அர்பாப்சியார் கேட்டார்.
உஷாரான உளவாளி, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளிடம் கூறினார். அவர்கள் தொடர்ந்து சந்திக்கும்படியும், உரையாடல்களை பதிவு செய்யும் படியும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து இருவரும் பல முறை மெக்சிகோவில் சந்தித்தனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அர்பாப்சியாரின் தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தத் தான் தயார் என உளவாளி தெரிவித்தார்.
இதற்கு கூலியாக, திட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட 1.5 மில்லியன் டாலர் (ஒரு மில்லியன் - 10 லட்சம்; ஒரு டாலர் - 45 ரூபாய்) தொகையில் இருந்து உடனடியாக, ஒரு லட்சம் டாலர், உளவாளியின் அமெரிக்க வங்கி கணக்குக்கு ஈரானில் இருந்து செலுத்தப்பட்டது.
"சவுதி தூதர் ஜூபைர் அடிக்கடி செல்லும் உணவு விடுதியில் அவரை நேரடியாக துப்பாக்கியால் சுட்டோ, வெடிகுண்டு மூலம் தாக்கியோ கொல்ல வேண்டும். வேறு வழியில்லை என்றால், அவரோடு உணவு விடுதியில் இருக்கும் 150 பேரும் செத்தாலும் பரவாயில்லை' என அர்பாப்சியார் தெரிவித்துள்ளார்.
மீதித் தொகைக்கு உத்தரவாதமாக தன்னோடு மெக்சிகோ வர வேண்டும் என உளவாளி அர்பாப்சியாரை வற்புறுத்திய போது அவர் மறுத்து விட்டு, செப்., 28ம் தேதி நியூயார்க்கிற்கு விமானத்தில் சென்றார். மறுநாள் அங்கு கைது செய்யப்பட்டார்.
திட்டம் தீட்டிய ஈரான் புரட்சிப் படை : ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பாதுகாக்க, ராணுவத்தின் ஒரு பிரிவாக, "புரட்சிப் படை' உருவாக்கப்பட்டது. இப்புரட்சிப் படையின் ஒரு பிரிவு, "குத் படை.' இப்படை வெளிநாடுகளில் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பரப்ப செயல்படும். இதில் தான் அர்பாப்சியாரின் உறவினர் அப்துல் ரசா ஷாலாய் முக்கிய பதவியில் உள்ளார். இவர் தான் அர்பாப்சியாரைத் தொடர்பு கொண்டு, சதித் திட்டத்தைச் செயல்படுத்தும்படி கேட்டுக் கொண்டவர். ஷாலாயின் உதவியாளர் தான் கோலம் ஷக்குரி. விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட அர்பாப்சியார் தான் இத்தகவல்களைக் கூறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment