Wednesday, October 19, 2011

இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ

இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை ஜனாதிபதி கூறியுள்ளார்.

வடக்கில் கிளிநொச்சசி கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, ஆகிய பிரதேசங்களுக்கு அபிவிருத்தியை மேம்படையச் செய்வதே எனது நோக்கம் எனவும் இதற்கு மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என இந்த நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி இன்று பகல் நீர்வழங்கல் திட்டத்திற்கான நினைவுப் படிகல்லை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் அத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அமைச்சர் தயாரத்ன, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் ரீட்டா ஓ சலிவன், கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விக்கிரம ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது,

இனிமேல் இந்த நாட்டில் குறுகிய இனவாத அரசியல் வேண்டாம். அனைவரும் ஜனநாயக வழியில் வாழ வேண்டும். ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்த தீர்மானம் எடுத்தாலும் எமது புத்தியுடன் செயல்படவேண்டும். இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் பாதுகாக்கவேண்டியது எனது பொறுப்பு. அது எனது கடமை. இந்த நாட்டில் எல்லா மக்களும் சமவுரிமையுடன் சுய கௌரவத்தோடு வாழவேண்டும். தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருக்க நான் ஒரு போதும் அனுதிக்க மாட்டேன்.

கருணா அம்மானும் ரணிலும் அன்று பேச்சுவார்த்தைகளை நடத்திய, நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கியமான பிரதேசத்துக்கு நான் இன்று வருகை தந்திருக்கிறேன். எங்கள் பகுதிகளில் கூட இவ்வாறான ஒரு பாரிய குடி நீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. உங்களுக்காக இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். உங்களுக்கிருக்கின்ற எல்லா பிரச்சினைகளும் நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகள்தான் என்றார்.

No comments:

Post a Comment