புலிகளின் அரசியல் பிரிவுதான் கூட்டமைப்பு: தடை செய்ய வேண்டும்
அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு இரகசிய தகவல்களை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடைச் செய்து அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியறுத்தியுள்ளது. அரசாங்கம் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் கூட்டமைப்புடன் முன்னெடுக்க கூடாது. இனப்பிரச்சினையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ரத்து செய்து விட்டு நாட்டிற்கு எதிரான சக்திகளை தண்டிக்க வேண்டும். என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில்,
புலிகளின் அரசியல் பிரிவுதான் கூட்டமைப்பு, இவர்கள் தொடர்ந்தும் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். தேசிய அரசியலில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு எதிராகஅவர்கள் செயல்படுவதை இனி ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு அரசிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இதுத் தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தி உண்மை நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு நாட்டிற்கு எதிரான தகவல்களை கூட்டமைப்பு, ஐ.நா. விற்கு வழங்கியிருக்குமாயின் அக்கட்சியை உடனடியாக தடைச் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி அனைத்து உறுப்பினர்களையும் விசாரணை செய்து தண்டனை வழங்கவேண்டும். ஏனென்றால் நாட்டிற்கு எதிராக செய்படுபவர்களை பதவி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதே முறையாகும்.
கூட்டமைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கோ தமிழ் மக்ககளுக்கோ நன்மை செய்தது கிடையாது. பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு அழிவுகளையும் பின்னடைவுகளையுமே தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொடுத்துள்ளது. இவர்கள் உள்நாட்டில் இருந்து கொண்டு சர்வதேசத்தில் இடம்பெறும் நாட்டிற்கு எதிரான சதிகளுக்கு துணைப் போகின்றனர் என்றார்.
0 comments :
Post a Comment