Friday, October 7, 2011

பாகிஸ்னுடனான உறவை ஆய்வு செய்வோம்: ஒபாமா

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பாகிஸ்தான் உடனான உறவை அவ்வப்போது ஆய்வு செய்வோம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் வியாழக்கிமை நிருபர்களிடம் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் உளவு அமைப்பும் (ஐ.எஸ்.ஐ) சில விரும்பத்தகாத சக்திகளுடன் தொடர்பு வைத்துள்ளன. இதில் சந்தேகமே இல்லை. இந்த தொடர்பு, அமெரிக்காவுக்கு தொந்தரவாக இருக்கிறது. இந்த தொடர்பு குறித்து பகிரங்கமாகவும், பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

பயங்கரவாதிகளுடனான தொடர்பு காரணமாக, பாகிஸ்தான் என்ன பின்விளைவுகளை சந்திக்கும் என்று நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க பாகிஸ்தானுடனான உறவை அவ்வப்போது ஆய்வு செய்வோம்,” என்றார்.

மேலும், “ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவினால், அந்நாடு இந்தியாவுடன் கூட்டு சேரும் என்றும், அதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் பாகிஸ்தான் கருதுகிறது. ஏனென்றால், இந்தியாவை தனது மிகப்பெரிய எதிரியாக பாகிஸ்தான் கருதுகிறது.

ஆனால் இந்தியாவுடன் அமைதியான அணுகுமுறையை கடைபிடிப்பதுதான், எல்லோருக்கும் நல்லது என்றும், பாகிஸ்தான் உண்மையிலேயே வளர்ச்சி அடைவதற்கும் அத்தகைய அணுகுமுறை உதவும் என்றும் பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய உடன், அந்நாட்டில் தீவிரவாத குழுக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. அதனால்தான், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவுவதுதான், பாகிஸ்தானுக்கும் நல்லது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்த முயன்று வருகிறோம். எனவே, ஸ்திரமான, சுதந்திரமான ஆப்கானிஸ்தானை, பாகிஸ்தான், தனக்கு அச்சுறுத்தலாக கருதக்கூடாது,” என்றார் ஒபாமா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com