போர் குற்ற விசாரணை கோரிக்கையில் திஸர சமரசிங்கவின் பெயர் இல்லை.
கடற்படையினர் போர்குற்றம் செய்யவில்லை முன்னாள் கடற்படைத்தளபதி.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு அவுஸ்திரேலியாவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் திஸர சமரசிங்கவின் பெயர் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த போர் குற்ற விசாரணை கோரிக்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொது வழக்கு தொடர்பான பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஜூரிக்கள் ஆணைக்குழுவின் அவுஸ்திரேலிய தேசிய பிரிவின் தலைவரான ஜொண் டவுட் தெரிவித்துள்ளார்.
போர் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோமே தவிர எந்த தனிநபர்களது பெயரும் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போரின் இறுதிப் பகுதியில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து புலனாய்வு செய்யுமாறு அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு ஒரு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஜூரிக்கள் அமைப்பு என்னும் அமைப்பே இந்தக் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதற்கு ஆதாரமாக ஐநா செயலர் நியமித்த நிபுணர் குழுவின் ஆவணங்களும் மற்றும் ஜூரிக்கள் அமைப்பால் கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஜூரிக்கள் ஆணைக்குழுவின் அவுஸ்திரேலிய தேசிய பிரிவின் தலைவரான ஜொண் டவுட் தெரிவித்துள்ளார்.
ஒரு சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிப்பதற்காகவே தாம் ஆதாரங்களை திரட்டிய போதிலும், அப்படியான ஒன்று இது வரை உருவாகாதாக காரணத்தால் இந்த ஆவணைங்களை தாம் அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அப்படியான புலனாய்வை செய்வதற்கு அவுஸ்திரேலிய சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறிய ஜொண் டவுட், இலங்கையை சேர்ந்த தமிழ், சிங்கள மக்கள் அவுஸ்திரேலியாவில் கணிசமாக வாழும் நிலையில் அதற்கான கடப்பாடு அந்த நாட்டுக்கு இருப்பதாகவும் கூறுகிறார்.
இலங்கைப் போரில் ஈடுபட்ட இரு தரப்புக்கும் எதிராகவும் தம்மிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இறுதிக் கட்ட யுத்தத்தில் தான் கடற்படை தளபதியாக இருந்தபோது இலங்கை கடற்படையினர் எவரும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும் அவுஸ்திரேலியாவுக்கான தற்போதைய இலங்கை தூதுவருமான அத்மிரால் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு கூறியதாவது,
'ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக நிராகரிக்கிறேன். நான் தளபதியாக இருந்த போது இலங்கை கடற்படையினர் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. தீவிரவாதிகளே பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நான் தளபதியாக இருந்தபோது பிரச்சினை எதுவும் இல்லை. நான் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றபோது பிரச்சினை முடிந்துவிட்டது. கடற்படையினர் பொது மக்கள் மீது வேண்டுமென்றோ அல்லது அநாவசியமாகவோ தாக்குதல் நடத்தவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.' என திஸர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment