துமிந்தவின் தலையில் சிக்கியிருந்த இரு சன்னங்கள் எடுக்கப்பட்டனவாம்.
முல்லேரியா பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் உட்பட மூவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயத்துக்குள்ளான கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வா தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்வத்தில் காயமடைந்த துமிந்த சில்வாவுக்கு தலையில் சத்திர சிகிச்சை ஒன்று செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தற்போது ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவிற்கு சற்று முன்னர் சத்திசிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துமிந்த சில்வா ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும், அவருக்கான சத்திரசிகிச்சை தொடர்வதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தலையிலிருந்து இரு துப்பாக்கி ரவைகள் அகற்றப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த ஐவரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்த இன்று மாலை 3.30 மணி முதல் நாளை காலை ஆறு மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற இடத்தில் வாகனமொன்றுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் இரண்டு வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொலன்னாவை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணித்துள்ளார்.
தெற்காசிய கடற்கரை விழாவின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதையடுத்து இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
முல்லேரியா ஹிம்புட்டான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் கூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.
கொலன்னாவை தேர்தல் தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக பாரத லக்ஷ்மன் பெரோ கடமையாற்றிய அதேவேளை, தற்போதைய தொகுதி அமைப்பாளராக துமிந்த சில்வா கடமையாற்றி வருகின்றார்.
நேற்றைய தினம் இரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களுக்கும், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 அளவில் மோதல் ஏற்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டவாறு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment