எலி கடித்து பெண் குழந்தை பரிதாப உயிரிழப்பு: பொத்துவிலில் சம்பவம்
11 ஆவது நாள் பெண் குழந்தை ஒன்று எலி கடித்து அடுத்த நாள் உயிர் இழந்த சம்பவம் ஒன்று பொத்துவில் பகுதியில் கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மரண விசாரணையை மேற்கொண்ட பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எல்.எம். ஹில்மி பிரேத பரிசோதனையின் பின் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.என். பெர்னாண்டோ குழந்தையின் உடல் பாகங்களை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பியதையடுத்து பிரேதம் உறவினர்களிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, பொத்துவில் பாக்கியவத்தை அல் கலாம் வீதியில் உள்ள வீடொன்றில் இளம் குடும்பத்தினருக்கு கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் குழந்தையாக பிறந்த பெண் குழந்தை 29 ஆம் திகதி வீட்டில் தூக்கிக் கொண்டிருக்கும்போது அழுகை சத்தம் கேட்டு வெளியில் நின்ற தாய் ஓடி வந்து பார்த்தபோது குழந்தைக்கு பக்கத்தில் நின்று எலி ஓடுவதை கண்டுள்ளார்.
அதே கணம் பிள்ளையை பார்த்தபோது காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் ஓடுவதை கண்ட பின்னர் வைத்தியர் ஒருவரிடம் காண்பித்ததையடுத்து 1 ஆம் திகதி பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிர் இழந்துள்ளது.
0 comments :
Post a Comment