பாரத லக்ஷ்மனின் மரணம் தொடர்பில் சாட்சியாளர்களை அழைக்க நீதிமன்றம் உத்தரவு.
கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் வர்த்தக தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களுக்காக பணிப்பாளர் நாயகமுமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் சாட்சியாளர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அழைத்து வருமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பான முழு அறிக்கை ஒன்றை வெல்லம்பிட்டி பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்பித்தனர். இந்த அறிக்கையை பரிசீலினைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சாட்சியாளர்களை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றுக்கு அழைத்து வருமாறு பணித்துள்ளது.
அத்துடன் பாரத லக்ஷ்மனின் இறுதிக் கிரியைகளை எதிர்வரும் 12ம் திகதி கொலன்னாவை உமகிலிய விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை,முல்லேரியாவில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சண்டையில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த குறித்த நபர் இன்று அதிகாலை 5.25 அளவில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ராகம பிரதேசத்தில் வசித்துவந்த மணிமெல் குமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் பணிப்புரையின் பேரில் சி.ஐ.டி யினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சனிக்கிழமை மாலை முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பி. பாரத்த லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. யும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையிலும் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐயந்த குலதிலக்க மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் பெரேரா ஆகியோரின் தலைமையில் இரு விசேட குழுக்கள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
துப்பாக்கிச் சமர் இடம்பெற்ற பகுதிக்கு நேற்று விஜயம் செய்த இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் தமது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சம்பவ இடத்திலிருந்து வெற்று 25 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் அமைதி நிலவியதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மெக்ஷி புரொக்டர் தெரிவித்தார்.
முல்லேரியா ஹிம்புட்டான பிரதேசத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க பொது நூலகத்துக்கு முன்பாக சங்மல் உயன என்ற இடத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தின் அருகே பிற்பகல் 3.30 மணி யளவில் இத்துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதென பொலிஸ் பேச்சாளர் மெக்சி புரொக்டர் கூறினார். முன்னாள் எம்.பி. பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களும் துமிந்த சில்வா எம்.பியின் ஆதரவாளர்களுமே திடீரென மோதிக்கொண்டுள்ளனர்.
இதன்போது இரு தரப்பினருக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் முன்னாள் எம்.பி. பிரேமச்சந்திரவும் அவரது மெய்ப்பாதுகாவலரும் மற்றும் இரு ஆதரவாளர்களும் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி ரவைகள் தலைக்குள் பாய்ந்த நிலையில் படுகாயமுற்றிருந்த துமிந்த சில்வா எம்.பி. உடனடியாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் இருவர் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதையடுத்து வீடு திரும்பியிருப்பதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.
அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் துமிந்த சில்வா எம்.பிக்கு மெய்ப்பாதுகாவலராகவிருந்த பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சார்ஜனின் நிலைமை சற்று கவலைக்கிடமாக விருப்பதாகவும் ஆஸ்பத்திரி பொலிஸார் கூறினர். மேலும் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ் டபிள் ஜயசிறி (இல-19740) என்பவரும் குமார எனும் சிவிலியன் ஒருவரும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்னைய தினமான வெள்ளிக்கிழமை இரவு முன்னாள் எம்.பி. பிரேமச்சந்திரவின் ஆதரவாளர் ஒருவர் கொலன்னாவையில் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே சனிக்கிழமை மேற்படி இரு குழுக்களும் மோதிக்கொண்டிருக்கலா மென சந்தேகம் எழுந்துள்ளபோதும் சி.ஐ.டி. யினரின் விசாரணைகள் முடிவடையும்வரை எதனையும் திட்டவட்டமாக கூற முடியாதெனவும் பொலிஸ் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment