பாராத லக்ஷ்மன் ன் இறுதிக் கிரியை கொலன்னாவ உமகிலிய விளையாட்டரங்கில் இன்று
முல்லேரியாவில் கடந்த 8ம் திகதி தேர்தல் தினத்தன்று இரு குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சண்டையில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாராத லக்ஷ்மனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அன்னாரது பூதவுடல் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் எனவும் பிற்பகல் நான்கு மணியளவில் கொலன்னாவ உமகிலிய விளையாட்டரங்கில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாலை ஆறு மணியளவில் பூதவுடலை தகனம் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பிற்பகல் 1.30 மணி வரை பொது மக்கள் அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியும் எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரேணுக்க பெரேரா தெரிவித்தார்.
காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனின் சடலம் தற்போது அவருடைய கொலன்னாவை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
55 வயதான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர ஸ்ரீலங்கா மஹஜன கட்சி ஊடாக அரசியலில் நுழைந்தார். 1979ம் ஆண்டு கொலன்னாவை பிரதேச சபைக்குத் தெரிவான அவர் 1988ம் ஆண்டு ஸ்ரீலங்கா மஹஜன கட்சி ஊடாக மேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் பாராளுமன்றுக்கு பாரத தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்ரவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் கொலன்னாவ மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பாதுகாப்பு பணிகளில் சுமார் 600 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி ப்ரொக்டர் கூறியுள்ளார்.
இது தவிர, இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படை வீரர்களும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சிவில் ஆடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளும் கொலன்னாவ பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்க்ஷ்மன் பிரேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகளின் போது அநாவசிய குழப்பங்கள், பிரச்சினைகளை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment