அரசியல் யாப்புகள் மக்கள் பிரதிநிதுத்துவத்தை மீளப் பெறும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும்.
சுவிஸ் நாட்டு அரசியலமைப்பு அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள மக்கள் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் உரிமை ஓவ்வொரு நாட்டு அரசியலமைப்பும் மக்களுக்கு வழங்குமாயின் அரசியல் சாக்கடையாக அன்றி புனித நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கும்.
அரசியல் ஒரு சாக்கடை என்றான் ஓர் அறிஞன். அரசியல் புனிதமானது, போற்றத்தக்கது, உத்தமமானது அது சாக்கடையாவதற்கு அதனுள் நுழைந்தவர்கள் செய்யும் அடாவடித்தனம்களும் கட்சி தாவலும் வாக்குத்தவறுதலும் நம்பிக்கை துரோகமுமே காரணியாகின்றன.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரசியல்வாதிகளின் தலைவிதியை தீர்மானிக்க மக்கள் சக்தியான வாக்குப்பலம் தொடர்ந்தும் மக்களிடம் இருக்குமாயின் அரசியலை புனித நீரோடையாக மாற்றியமைத்து நாட்டை பயன்பெற வைக்கலாம். யோக்கியனாக வாழும் ஒருவன் அயோக்கியனாக மாறுவதற்கு அவனுக்குக்கிடைக்கும் திடீர் சுகபோகம்களே காரணமாக அமைகின்றன.
வாழ்நாளில் அனுபவித்தறியாத ஒன்று ஒருநாள் அனுபவிக்க கிடைக்கப்பெற்ற ஒருவன் அதை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள தேர்ந்தெடுக்கும் பாதைகள் அவனை அயோக்கியனுக்குரிய அடாவடித்தனங்கள், கட்சி தாவல், வாக்குத்தவறல் போன்ற இயல்புகளுடன் நம்பிக்கை துரோகியாக்குகின்றன.
தெளிந்த நீரோடையில் அதிக மீன்பிடிக்க முடியாது, குழம்பிய குட்டையிலேயே பெருமளவு மீன்களைப்பிடிக்கலாம், அரசியல் புனிதமானதாக இருந்தால் அதில் நீடித்து இருக்க முடியாது எனும் கருத்து பெரும்பாலான அரசியல் வாதிகளிடையே நிலவுவதை யாரும் மறக்க முடியாது. நாகரிக மனிதனாக வாழ்ந்தால் நடைமுறையில் போதியளவு மதிப்புக்கிடைப்பதில்லை என்பதனாலேயே அந்த மதிப்பை அதட்டிப் பெறுவதற்காக அடாவடித்தனம்களில் ஈடுபடுகின்றனர்.
அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டால் பார்ப்பவர்கள் அனைவரும் தமக்கு பணிந்து நடக்க வேண்டும் எனும் கீழ்தரமான உணர்வே அவர்களை இந்த நிலமைக்கு இட்டுச்செல்கிறது. நாகரிகம் மேலோங்கிய இன்றைய உலகில் சற்றேனும் மனிதப்பண்பு இல்லாத காட்டுமிராண்டிகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை வழிக்குக்கொண்டுவரக்கூடிய மேல்நிலைப்பதவிகளோ புத்தியீவிகளோ இல்லாமை வேதனையாகவுள்ளது. தேவையற்ற விடயம்களை கருத்திலெடுத்து அலட்டிக்கொண்டிருக்கும் எமது நாட்டு ஆளும்கட்சி, எதிர்கட்சி, உதிர்கட்சிகளை சேர்ந்த புத்தியீவிகள் இவ்விடயத்தை கருத்திலெடுத்து மக்கள் நலனுக்காக உரத்த குரலில் ஒருமித்து நிற்பார்களாயின் இத்தகைய அரசியல்வாதிகளின் கொட்டம் என்றோ அடங்கியிருக்கும். நன்றிகெட்ட வர்க்கமொன்று என்றோ இல்லாமல் போயிருக்கும்.
ஆனால் அவர்களும் நேரத்துக்கு நேரம் கருத்துக்களை மாற்றும் சிந்தனையாளர்களாக இருப்பதால் தாங்கள் தோண்டிய குழி தங்களுக்கே புதைகுழியாகிவிடும் எனும் பயத்தினால் அந்தப்பாதையை நினைக்காமலேயே இருந்து விடுகின்றனர். மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளக்கூடிய தலைவர்களை தவறவிட்டு தன்னலம் பேணும் தறுதலைகளையே தேர்ந்தெடுத்து விட்டோம் என மக்கள் வருந்துவதற்கு காரணம் இவர்களேயாவர்.
சுவிஸ் நாட்டு அரசியலமைப்பு அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள மக்கள் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் உரிமை ஓவ்வொரு நாட்டு அரசியலமைப்பும் மக்களுக்கு வழங்குமாயின் அரசியல் சாக்கடையாக அன்றி புனித நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கும். மனிதனை விலங்குகளினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவே. பகுத்தறிவு அமைவதற்கு அடிப்படையாக அமைவது கல்வியே. கட்சிகளின் அவசர தேவைக்காக மக்கள் பிரதிநிதித்துவத்திற்கான ஆட்தெரிவு நிகழும்போது கட்சி தலைமைகளுக்கு தெரிவதெல்லாம் அவர்களுக்கு அவ்வப்Nhது எடுபிடி சேவகம் செய்து அவர்களது வயிற்றையும் சட்டைப்பைகளையும் நிறைக்க துணைபுரியும் குப்பைகளே.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் தொடர்ந்தும் இத்தவறினை செய்து வருகின்றமை அதன் எதிர்கால நலனுக்கு நல்லதல்ல. தமிழ் தேசிய உணர்வினின்றும் விலக விரும்பாத மக்கள் வேறு தெரிவின்றி, காற்றினால் அள்ளுண்டு மேற்தளத்தில் படிந்த குப்கைளில் ஓரளவு சிறந்தவை எனக்கருதக்கூடியவற்றை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். நாம் என்ன செய்தாலும் மக்களின் தேசிய உனர்வு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வைத்துவிடும் என கூட்டமைப்பு தலைமைகள் தொடர்ந்தும் எதிர்பார்த்தால் அது தமிழ் தேசியத்துக்கே ஆபத்தாகிவிடும் ஏனெனில் குப்பைகள் அவற்றின் இயல்பை காட்டிவிடும்.
தமிழ் தேசிய உணர்வு தமிழ் மக்களிடையே வெறியாக மாறக்காரணமாக, இதுவரை இலங்கையின் ஆட்சியாளர்கள்தான் இருந்துள்ளனர் எனும் உயரிய உண்மை இன்று உணரப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் முனைப்புக்கண்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் எதிர்பார்க்கும் தமிழ் Nதிசயம் தொடர்ந்து இருக்குமென எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் பெரும்பாண்மைக்கட்சிகளோ, அரசாங்கமோ தமிழ் மக்களின் இன்னல்களை இனம் கண்டு அவர்களது துயர்துடைக்கும் செயற்திட்டம்களை முன்னெடுப்பதுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட சலிப்புக்களை போக்கும் திட்டம்களை வகுக்கத்தொடங்கினால், யதார்தத்தை புரியாமல் தான்தோன்றி தனமாக செயற்பட்டுவரும் கூட்டமைப்பு தலைமைகளின் நிலை அதோ கெதியே. ஆதலால் இவர்கள் ஏதேனும் முடிவெடுக்க முன்னர் மக்களின் எண்ணம்களை நாடிபிடித்தறிந்து அதற்கேற்ப செயற்படவேண்டும்.
அண்மைக்காலமாக் தமிழ்தேசிய கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தில் தமிழன் இல்லாத காட்டுமிராண்டி நிலையிலேயே உள்ளான் என்று உலகுக்கு பறை சாற்றி இழிவுபடுத்துவதாகவே உணரப்படுகின்றன. கற்றுக்கொடுத்த சமுகம் கல்லாதவன் தலைமையை ஏற்பதா என புத்திஜீவிகள் கிளர்ந்தெழுமளவுக்கு தமிழ் தலைவர்கள் தவறு விட்டுக்கொண்டே செல்கின்றனர். ஆறாம்தரம்கூட படிக்காதவர்களும் சபையில் பேசத்தெரியாதவர்களும் கூட்டமைப்பு தலைவர்களுக்கு பேராசிரியர்களாக தெரியத்தொடங்கிவிட்டனர் என்பதை உணரும் புத்திஜீவிகள் எதிர்காலத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் தமிழ் தேசியத்தை குழிதோண்டிப்புதைத்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழத்தொடங்கவிட்டது.நான்கெழுத்து படிக்காதவன் நாதியற்ற நம் சமூகத்தின் பிரச்சினையை மக்கள் சபையில் எவ்வாறு முன்வைக்கப்போகின்றான்? எனும் ஐயம் மக்களை பலவாறாக சிந்திக்க வைக்கிறது.
இந்நிலையில் கட்சித்தலைமைகள் ஒருதடவைவிட்ட தவறைக் திருத்தி அமைக்கக்கூடிய உரிமையாகிய மக்கள் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் உரிமை மக்களுக்கு கிடைக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழுகிறது. இதைநிறைவேற்ற நமது தலைமைகள் குரல்கொடுக்க வேண்டும் எனும் வேண்டுகோள் நியாயமனதல்லவா. யாரோ எழுதிக்கொடுத்ததை ஒப்புவிக்கும் ஒருவன் தனது சமுகத்தேவைகளை உணரும் சுய அறிவுகொண்டவனாக இருப்பானென எதிர்பார்க்க முடியுமா? மாற்றானுக்கும் கற்றுக்கொடுத்த சமூகம் நம்சமூகம்.
தமிழ் தலைமைகள் தாம்விட்டுக்கொண்டே செல்லும் தவறுகளுக்கு பிராயச்சித்தமாகவும், உலக மக்களின் பார்வையை தமிழர்களின் துணிச்சலை மெச்சும் வகையிலும் திருப்பும் வகையிலும் இக்கருத்தினை நாடாளுமன்றத்தில் உரத்துக்கூறி ஒவ்வொரு நாட்டு அரசியலமைப்பும் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் உரிமையை மக்களுக்கு அளிக்கும் சரத்தினை கொண்டிருக்க ஆவன செய்யும் முன்னோடிகளாகவும் அமைய வேண்டும் என்பதே எமது அவாவும் பிரார்த்தனையுமாகும்.
அவ்வாறு தாம் வழங்கிய பிரதிநிதித்துவத்தை திருப்பி பெறுவதற்கான உரிமை மக்களுக்கு கிடைக்கப்பெற்றால் மக்கள் பிரதிநிதியானவன் தான் பாராளுமன்றில் உள்ள அந்த ஐந்து வருடங்களும் மக்களுக்கு கடமைப்பட்டவனாக இருப்பான், மக்களுடன் இருப்பான், மக்கள் சேவையே மகேசன் சேவை என நினைப்பான்.
இன்று என்ன நடக்கின்றது? நீங்கள் தந்து விட்டீர்கள் முடிந்தால் எடுத்துப்பாருங்கள் என இறுமாப்பு காட்டுகிறார்கள். வாக்கு எடுக்கும்போது வீடுதேடி வந்து ஐயா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, குஞ்சப்பா, பெரியப்பா என உலகில் இல்லாத உறவு முறை அத்தனையும் அவர்களுக்கு தெரியும், தெரிவாகி நாங்கள் ஒருமுறை அவர்களிடம் சென்றுவிட்டால் நான்கு மாதம் அலையவேண்டும் அவர்கள் திருமுகம்காண. கண்டாலும் நாம் எதிர்பார்தவை நிறைவேறவா போகிறது. இதற்காகவே நாம் கொடுத்ததை திருப்பிபெறும் அதிகாரம் வேண்டும் என்கின்றோம்
0 comments :
Post a Comment