இந்தியா: அடுத்த பிரதமராக பல வியூகப் போட்டா போட்டி
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வருவது என்பதில் வரலாறுகாணா போட்டாபோட்டி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக தரப்பில் மோடி, அத்வானி ஆகியோருக்கு இடையில் பெரும் அரசியல் போர் வெடிக்கும் போல் தெரிகிறது.
இவர்கள் ஒருபுறம் இருக்க, ஊழலை ஓழிக்கப் போவதாக ஒரே முழக்கமாக முழங்கிவரும் அன்னா ஹசாரே என்ற சமூக வாதியும் அரசியல் தேர்தல் களத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்வார் என்று பேசப்படுகிறது.
பாஜக தலைவரான அத்வானி எப்படியாவது பிரதமராகிவிட வேண்டும் என்று பல ஆண்டு காலமாகக் கனவு கண்டுவருகிறார். ஆனால் இன்னமும் அவருக்குக் காலம் கனியவில்லை.
இந்த நிலையில், வரும் 2014ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அவர் நாடு முழுவதும் ரத யாத்திரையைத் தொடங்குகிறார். இந்த மாதம் 11ம் தேதி பீகாரில் தொடங்கும் அவரின் ரத யாத்திரை, 23 மாநிலங்கள் வழியாக மொத்தம் 7,600 கிமீ தொலைவு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த பிரதமர் பதவிக்கு தன்னை எடுப்பாகக் காட்டிக் கொள்வது அத்வானியின் இலக்கு என்று தெரிகிறது. ஆனால், அத்வானி பிரதமர் ஆவது பற்றி கட்சியில் இணக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
பாஜகவின் மிக அதிக செல்வாக்கு உள்ள குஜராத் முதல்வர் மோடி, மாநில அரசியலுக்கு அப்பாலும் விரிவடைந்து மத்திய அரசியலில் ஈடுபட்டு பிரதமர் ஆகலாம் என்று விரும்புவதாகத் தெரிகிறது. இதை மனதில் கொண்டு அவர் முதலாவதாக குஜராத் மாநிலம் முழுவதும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரத இயக்கத்தைத் தொடங்குகிறார். குஜராத் முதல்வர் கடந்த 17ம் தேதி முதல் 3 நாட்கள் மத நல்லிணக்கம், சமய ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.
வருகிற 16-ந்தேதி துவாரகையில் மோடி உண்ணா விரதத்தை தொடங்குகிறார். தொடர்ந்து மற்ற மாவட்டங் களிலும் சுற்றுப்பயணம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்து உள்ளார். சிறுவயது முதலே இந்து இயக்கங்களில் ஈடுபட்டு வந்த மோடி, சமய நல்லிணக்கத்தின் தூதர் என்று தம்மைக் காட்டிக் கொள்ள முயல்கிறார் என்பது எதிர்க்கட்சியினர் கருத்தாக இருக்கிறது.
இவர்கள் ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் ஆட்சியை எப்படியும் ஒழிக்க வேண்டும் என்று வலி யுறுத்தும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தான் பாஜகவாதி அல்ல என்று சொல்லி வருகிறார். என்றாலும் அவர், கடைசியில் பாஜகவின் பெருந்தலைவர் அத்வானி தரப்புக்கு ஆதரவு தருவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பாஜக இப்படி இருக்க, ஊழல் உள்ளிட்ட பெரும் பிரச்சினைகளில் சிக்கி இருக்கும் காங்கிரஸ் கட்சி, இனியும் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் அரசில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி அண்மையில் ராகுல் காந்திக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது என்று பார்வையாளர் ஒருவர் விளக்கிச் சொன்னார்.
எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் அடுத்த பொதுத் தேர்தலில் ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்பது ஏறக்குறைய தெளிவு. எதிர்த்தரப் பில் இணக்கம் இருக்குமா என்பது தெரியவில்லை.
0 comments :
Post a Comment