தீபாவளியை முன்னிட்டு, புனர்வாழ்வுபெற்ற 365 விடுதலைப் புலி உறுப்பினர்களை சமூகமயப்படுத்தி, அவர்களின் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கும் வைபவவம் இன்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையில் இடம்பெற்றது. வெள்ளவத்தை, இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில், இந்நிகழ்வு இடம்பெற்றது. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, இநநிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்டுபேசிய பிரதமர் டி.எம். ஜயரட்ன நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும், சமமாக மதிக்கப்பட்டு, அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.
பிரதமர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை, பேச்சுவார்த்தை மூலமே, தீர்த்து வைக்க முடியும். அதற்காக, ஜனாதிபதி, பாராளுமன்ற குழுவொன்றையும் அமைத்து, அடுத்த 6 மாதங்களுக்குள், இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்தார்.
கடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, 12 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்கள், படையினரிடம் சரணடைந்தனர். இன்று விடுதலை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 365 பேருடன், இதுவரை மொத்தம் 11 ஆயிரம் புனர்வாழ்வுபெற்ற பயிலுனர்கள், சமூகமயப்படுத்தப்பட்டனர். மேலும் ஆயிரம் புனர்வாழ்வுபெற்ற பயிலுனர்கள், மாத்திரமே, எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை, மேற்கொண்டு, அடுத்த 4 மாதங்களுக்குள், அவர்களையும் சமூகமயப்படுத்துவதற்கு, திட்டமிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் சந்திரசிறி கஜதீர அங்கு தெரிவித்தார்.
இரத்மலானை இந்து கல்லூரியில் பயின்ற 273 புனர்வாழ்வு பெற்ற உறுப்பினர்கள், உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். மேலும் 202 பேர், இவ்வாண்டு பரீட்சை எழுதவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில், மாகாண ஆளுநர்களான ஜீ.ஏ. சந்திரசிறி, அலவி மௌலானா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ராஜகுரு மற்றும் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ்குமார், புனர்வாழ்வு பெற்ற உறுப்பினர்களின் பெற்றோரும், இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment