Wednesday, October 19, 2011

இலங்கை பிராண்ஸ் கூட்டுத்திட்டத்தில் கிழக்கில் பாரிய 5 பாலங்கள் ..

கிழக்கில் பாரிய 5 பாலங்கள் உட்பட மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள், ஆரம்பித்து வைக்கப்பட்டன. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய சமாதான சூழ்நிலையில், இலங்கை செல்லும் பயணத்தின் அபிவிருத்தியிலக்கை வெற்றிகொள்ளும் சவாலுக்கு, அரசாங்கம் வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளது. சகல மாவட்டங்களையும், சமமாக அபிவிருத்தி செய்வதே, அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண மக்களுக்கு, சிறந்த பயனை பெற்றுக்கொடுக்கும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 5 புதிய பாலங்கள், அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில், இன்று திறந்து வைக்கப்பட்டன.

உப்பாறு, கங்கை, இறால்குழி, வெருகல், காயங்கேணி ஆகிய பாலங்கள், திருகோணமலை, மட்டக்களப்பு ஏ-15 வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வெருகல், காயங்கேணி பாலங்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலும், உப்பாறு, கங்கை, இறால்குழி பாலங்கள், திருகோணமலை மாவட்டத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரான்ஸ் கூட்டு திட்டத்தின் கீழ் இப்பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென பிரான்ஸ் அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியிருந்தது. இலங்கை அரசாங்கம் 2.4 பில்லியன் ரூபாவை, செலவிட்டுள்ளது.

உப்பாறு பாலம், 315 மீற்றர் நீளம் கொண்டதாகும். இதற்கென, 995 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

245 மீற்றர் நீளம் கொண்ட கங்கை பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கென, 956 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இறால்குழி பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்;கு 570 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 175 மீற்றர் நீளம் கொண்டதாக இறால்குழி பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வெருகல் பாலம் 105 மீற்றர் நீளம் கொண்டதாகும். இதற்கென, 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

85 மீற்றர் நீளம் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட காயங்கேணி பாலத்திற்கு, 212 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

10.4 மீற்றர் அகலத்துடன் இரு மருங்குகளை கொண்டதாக, இந்த அனைத்து பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பாலங்களை நிர்மாணிப்பதற்கு, முன்னர் கிழக்கு மாகாண மக்கள், பாதைகளை பயன்படுத்தியே, தமது பயணங்களை மேற்கொண்டனர். கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு, இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தெற்கையும், கிழக்கையும் இணைக்கும் இப்பாலங்களுடாக, கிழக்கு மாகாண மக்கள் பாரியளவில் நன்மையடைவார்கள். அவர்களின் நன்மை கருதியே, இப்பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அரசாங்கம் இதற்கென பெருமுயற்சி எடுத்தது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கியமாக வாழும் கிழக்கு மாகாணம், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாகாணமாகும். இதன் காரணமாக, இங்கு மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள், முன்னெடுக்கப்படவுள்ளதாக, தெரிவித்தார்.

சிரேஷ்ட அமைச்சர் அதாஉத செனவிரட்ன, பிரதியமைச்சர்களான நிர்மல கொத்தலாவல, சுசந்த புஞ்சிநிலமே, எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பிரான்ஸ் அரச பிரதிநிதிகள் பலரும், இதில் கலந்து கொண்டனர்.

-----ஸித்தீக் ஹனீபா-----

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com